இஸ்ரேலிலிருந்து கடத்தப்பட்ட தாயும் மகளும் விடுவிப்பு
ஹமாஸ் கிளர்ச்சிக் குழு இஸ்ரேலிலிருந்து கடத்திய அமெரிக்காவைச் சேர்ந்த தாயையும் மகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2 வாரங்களுக்கு முன்னர் இஸ்ரேல் மீது திடீர்த் தாக்குதல் நடத்தியபோது ஹமாஸால் கடத்தப்பட்ட சுமார் 200 பேரில் அவர்களும் அடங்குவர்.
அவர்கள் ஹமாஸால் விடுவிக்கப்பட்ட முதல் 2 பிணையாளிகள். அந்தத் தாயும் – மகளும் பின்னேரம் இஸ்ரேலுக்குத் திரும்பினர். அவர்களது உடல்நிலை குறித்துத் தகவல் வெளியிடப்படவில்லை.
அவர்கள் விடுவிக்கப்பட்ட செய்தி மகிழ்ச்சியளிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Bide) தெரிவித்தார். அந்த 2 பெண்களிடமும் திரு. பைடன் தொலைபேசியில் உரையாடினார்.
இஸ்ரேலுக்கு விடுமுறைக்குச் சென்றிருந்த அவர்கள் தாக்குதல் நடந்த நாளன்று (7 அக்டோபர்) ஹமாஸ் கிளர்ச்சிக் குழுவால் கடத்தப்பட்டனர்.
கத்தாரும் எகிப்தும் கேட்டுக்கொண்டதை அடுத்து அவர்கள் இருவரும் மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கப்பட்டதாக ஹமாஸ் கூறியது.