இலங்கையின் கடன் உடன்படிக்கை தொடர்பில் ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
இலங்கை அடுத்த சில நாட்களில் சர்வதேச நாணய நிதியத்துடன் தனது எதிர்கால கடன் தவணைகள் தொடர்பாக உடன்படிக்கைக்கு வரவுள்ளது.
நிதி ஆதாரங்களை மேற்கோள் காட்டி ப்ளூம்பெர்க் இணையதளம் இதனை கூறியுள்ளது. கடனாளர்களுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
மொரோக்கோவில் நடைபெறவுள்ள உலக வங்கி குழு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த கூட்டத்திற்குப் பின்னர் இலங்கையுடன் பணியாளர் மட்ட உடன்பாட்டை எட்டுவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் நெருக்கமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாரிஸ் கிளப் மற்றும் பிற கடன் வழங்குநர்களுடன் கடன் மறுசீரமைப்பு விவாதங்கள் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழு இந்த வாரம் இலங்கையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட இலக்கு வைத்துள்ளது.
இதேவேளை, 12 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு கடனை மறுசீரமைக்க வெளிநாட்டு கடன் வழங்குநர்கள் குழுவொன்று இலங்கை அரசாங்கத்திடம் முன்மொழிந்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையின் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கடந்த 2ஆம் திகதி முன்வைக்கப்பட்ட இந்தப் பிரேரணைக்கு இலங்கை அரசாங்கம் இதுவரை பதிலளிக்கவில்லை.