கேரளா – இலக்குகளைத் தவறவிட்டதற்காக ஊழியர்களை சங்கிலியால் கட்டித் துன்புறுத்திய தனியார் நிறுவனம்

கேரள மாநிலம் கொச்சியில் இயங்கும் தனியார் நிறுவனத்தில் விற்பனை இலக்கை எட்டாத ஊழியர்களின் கழுத்தில் வாரைப் பூட்டி அவர்களை நாயைப் போன்று செய்கைகள் செய்யுமாறு துன்புறுத்தியுள்ளனர்.அச்சம்பவம் அம்மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த சிலருக்கு ஏப்ரல் 5ஆம் திகதி ‘வாட்ஸ்அப்’ பில் காணொளி ஒன்று பகிரப்பட்டது. அதில், சில இளையர்களின் கழுத்தில் நாய்களுக்குப் போடப்படும் வாரைக் கட்டி, அவர்களை நாயைப் போன்று மற்றவர்கள் இழுத்துச் செல்வது போன்ற காட்சிகள் இருந்தன.
அந்தக் காணொளியைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சிலர் கொச்சி காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக உடனடியாக விசாரணை மேற்கொண்ட காவல்துறை, கொச்சியில் இருக்கும் தனியார் சந்தைப்படுத்தல் நிறுவனத்தில் தான் இந்தக் கொடுமை நடந்தது எனக் கண்டறிந்தது. வீட்டு உபயோகப் பொருட்களை வீடு வீடாக சென்று விற்பனை செய்யும் நிறுவனம் அது.
அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாத விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்படும். அந்த இலக்கை எட்ட முடியாத ஊழியர்களை அந்நிறுவனம் துன்புறுத்தும் எனக் காவல்துறை நடத்திய விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால் அது தொடர்பாக இதுவரை யாரும் காவல்துறையிடம் புகார் தெரிவிக்கவில்லை. ஊழியர்களுக்கு நடந்த அந்தக் கொடுமை குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று கேரள தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவன் குட்டி தெரிவித்துள்ளார்.