கென்யாவின் மூத்த அரசியல்வாதி ரைலா ஒடிங்கா (Raila Odinga) காலமானார்!
கென்யாவின் மூத்த அரசியல்வாதி ரைலா ஒடிங்கா (Raila Odinga) இன்று காலமானார்.
ஒடிங்கா காலையில் வழக்கமாக மேற்கொள்ளும் நடைபயணத்தின்போது மயங்கி விழுந்த நிலையில் கூத்தாட்டுக்குளத்தில் (Koothattukulam)உள்ள தேவமாதா மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
அங்கு சிகிச்சைப் பெற்று வந்த அவர் சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல் தற்போது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக அவரது குடும்பத்தினர் ஒடிங்கா (Odinga) குணமடைந்து வருவதாக தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. அவருடைய மறைவுக்கு உலக தலைவர்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ரைலா ஒடிங்கா (Raila Odinga) கென்ய அரசியலில் ஒரு முக்கிய புள்ளியாக கருதப்படுகிறார். தேர்தல் சீர்த்திருத்தம் உள்ளிட்ட முக்கிய அரசியல் நகர்வுகளில் பெரும் பங்காற்றியுள்ளார்.
2008–2013 ஆண்டுவரை பிரதமராக பணியாற்றி ஆரஞ்சு ஜனநாயக இயக்கத்தை ( Orange Democratic Movement) வழிநடத்தியுள்ளார். அத்துடன் 05 முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவியுள்ளார்.
ஜனநாயகத்தை வலுப்படுத்துவதிலும், நல்லாட்சியை ஊக்குவிப்பதிலும், தேசிய ஒற்றுமையை வளர்ப்பதிலும் அவருடைய பங்கு இன்றியமையாததாகும்.




