ஈரான் போர் நீடித்தால்: பிரித்தானிய பொருளாதாரத்திற்கு ஆபத்து – கீர் ஸ்டார்மர் எச்சரிக்கை!
பிரித்தானிய பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் இன்று லண்டனில் உள்ள ஒரு சமூக மையத்திற்கு (Community Centre) வருகை தந்து உரையாற்றினார். அப்போது, ஈரானில் நடைபெற்று வரும் போர் நீண்ட காலம் நீடித்தால், அது பிரித்தானியாவின் ஒவ்வொரு குடும்பத்தையும் மற்றும் வணிகத்தையும் நேரடியாகப் பாதிக்கும் என்று எச்சரித்துள்ளார்.
மேலும் கச்சா எண்ணெய் விலை திடீரென உயர்ந்துள்ள நிலையில், “இந்தப் போர் எவ்வளவு காலம் நீடிக்கிறதோ, அந்த அளவிற்கு நமது பொருளாதாரம் மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்” என்று பிரதமர் தெரிவித்தார்.
அத்துடன் அதிகரித்து வரும் மின்சாரக் கட்டணம் மற்றும் எரிபொருள் விலையிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க தனது அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அவர் உறுதியளித்தார்.
ஈரானுக்கு எதிரான போரில் பிரித்தானியாவின் தற்காப்பு நடவடிக்கைகளை (Defensive position) நியாயப்படுத்திய அவர், நாட்டின் தேசிய நலன் மற்றும் மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே முடிவுகள் எடுக்கப்படுவதாகக் கூறினார்.
ஈரான் விவகாரத்தில் ஸ்டார்மரின் மென்மையான அணுகுமுறை குறித்து அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் எதிர்க்கட்சிகளிடமிருந்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்கு எதிரான முதல் கட்டத் தாக்குதலில் பிரித்தானியா நேரடியாகப் பங்கேற்காதது குறித்துத் தனது வருத்தத்தைத் தெரிவித்திருந்தார்.
மேலும் பிரித்தானியாவின் கன்சர்வேடிவ் (Conservative) மற்றும் ரிஃபார்ம் யூகே (Reform UK) கட்சிகள், ஸ்டார்மரின் முடிவுகள் தீர்க்கமானதாக இல்லை என்றும், அமெரிக்கா போன்ற நட்பு நாடுகளுக்குப் பிரித்தானியா போதிய ஆதரவை வழங்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளன.
இருப்பினும், ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்களிலிருந்து நட்பு நாடுகளைப் பாதுகாக்கவும், pirithaniya குடிமக்களைக் காக்கவும் தனது விமானப்படை (RAF) தொடர்ந்து ‘பாதுகாப்பு அரணாக’ (Shield) செயல்படும் என்று ஸ்டார்மர் மீண்டும் வலியுறுத்தினார்.
மேலும் உலகளாவிய எண்ணெய் தட்டுப்பாடு மற்றும் பணவீக்கத்தால் பிரித்தானிய மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதே தனது அரசாங்கத்தின் தற்போதைய முதன்மை நோக்கம் என்று ஸ்டார்மர் தெளிவுபடுத்தியுள்ளார்.





