காஷ்மீர் மேகவெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 46ஆக அதிகரிப்பு

இந்தியாவின் ஜம்மு காஷ்மீரின் கிஷ்தாவார் மாவட்டத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 46ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.பலரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களைத் தேடி மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
உயிரிழந்தோரில் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகளும் அடங்குவர்.
மேகவெடிப்பு ஏற்பட்டதை அடுத்து, சஷோட்டி கிராமத்தில் திடீர் வெள்ளம் கரைபுரண்டோடியது.இதில் பலர் உயிரிழந்தனர்.
பலர் இடிபாடுகளில் சிக்கித் தவிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.இதுவரை இடிபாடுகளிலிருந்து ஏறத்தாழ 167 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 38 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிக்கு அருகில் உள்ள வட்டாரங்களில் உயர் விழிப்புநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அவசரநிலை மீட்புப் பணியாளர்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.படுகாயம் அடைந்தோரில் ‘மச்சைல் மாதா’ யாத்திரையில் ஈடுபட்டோரும் பாதுகாப்பு அதிகாரிகளும் அடங்குவர்.
ரத்தம் தோய்ந்த ஆடைகள், விலா எலும்பு முறிவு, ஆழமான வெட்டுக் காயங்கள், சேறு நிரம்பிய நுரையீரல் ஆகியவற்றுடன் அவர்கள் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டனர்.
உயிரிழந்தோரின் குடும்பத்தினர்களுக்கு இந்திய அதிபர் திரௌபதி முர்முவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் தங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டனர்.நிலைமை மிக அணுக்கமாகக் கண்காணிக்கப்படுவதாக அவர்கள் கூறினர்.