இலங்கை அரசியலில் மீண்டும் கூட்டணி அமைக்கும் கருணா – பிள்ளையான்

மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு” என்ற கூட்டணியில் இணைவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் கருணா அம்மான் என்ற முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர்.
எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலை இலக்காகக் கொண்டு முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான சிவநேசத்துரை சந்திரகாந்தனின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் சதாசிவம் வியாழேந்திரனின் முற்போக்கு தமிழர் கழகமும் இணைந்து ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு” என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளனர்.
இதில் தற்போது கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி இணைந்துள்ளது.
இதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை மட்டக்களப்பில் உள்ள தனியார் விருந்தகம் ஒன்றில் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்துரைத்த பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், தமிழ் மக்களின் எதிர்கால அரசியலைக் கருத்திற் கொண்டு தங்களது இரு தரப்பும் இணைந்துள்ளதாகத் தெரிவித்தார்.