கர்நாடகா – கல்வி சுற்றுலாவில் பள்ளி மாணவனுடன் நெருக்கம்… தலைமையாசிரியை சஸ்பெண்ட்!
கல்வி சுற்றுலா சென்ற இடத்தில் பள்ளி மாணவனுடன் முத்தம் பரிமாறி, நெருக்கமான புகைப்படங்கள் எடுத்த தலைமையாசிரியை அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
பள்ளிகளில் பாலியல் ரீதியாக அத்துமீறும் ஆண் ஆசிரியர்களுக்கு போட்டியாக ஆசிரியைகளும் களமிறங்கி இருப்பது சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ளது முருகமலா கிராமத்தின் அரசுப் பள்ளியில் நிகழ்ந்த ஒரு சம்பவம் அதற்கு உதாரணமாகி இருக்கிறது. அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியை, தன்னிடம் பயிலும் 10ம் வகுப்பு மாணவர் ஒருவருடன் எடுத்துக்கொண்ட நெருக்கமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியன.
டிச.22 முதல் 25 வரையிலான நாட்களில், தர்மஸ்தலா உள்ளிட்ட இடங்களுக்கு கல்விச் சுற்றுலாவாக பள்ளி மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்த பயணத்தின்போது, பள்ளியின் 42 வயதாகும் தலைமை ஆசிரியை, 10ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவருடன் முத்தம் கொடுப்பது போலவும், கட்டியணைத்தது போலவும் புகைப்படம் எடுத்துள்ளார். இதர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அறியாத வகையில், தலைமையாசிரியர் – மாணவர் இடையிலான இந்த களியாட்டத்தை தலைமையாசிரியை கூறியதன் பெயரில் இன்னொரு மாணவர் படம் எடுத்துள்ளார்.
இதற்காக மேலும் இரு மாணவர்களை பாதுகாப்பு பணியிலும் தலைமையாசிரியை நிறுத்தி உள்ளார். சுற்றுலா முடிந்து ஊர் திரும்பிய பிறகு, நடந்த அனைத்தையும் அறிந்த பள்ளியை சேர்ந்த சிலர் அந்த புகைப்படங்களை வாட்ஸ் ஆப்பில் பரப்பி உள்ளனர். அவை இணையத்தில் வெளியானதும், பொதுவெளியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புகைப்படம் வெளியான தினத்தன்றே வட்டார கல்வி அதிகாரியான உமாதேவி, முருகமலா பள்ளிக்கு விரைந்து விசாரணை மேற்கொண்டார்.
ஆனால் அதற்குள் மாணவருடன் தான் எடுத்துக்கொண்ட இதர புகைப்படங்களை தலைமையாசியை அழித்திருந்தது விசாரணையில் தெரிய வந்தது. தலையாசிரியை உடன் புகைப்படத்தில் தோன்றிய மாணவரின் பெற்றோர் உட்பட திரளான பெற்றோர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனையடுத்து ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்ட தலைமையாசிரியை கல்வித்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்து, தங்களது விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.