கர்நாடகா-ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தை; தொடரும் மீட்பு பணிகள்!
கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றுக்குள் 2 வயது குழந்தை தவறி விழுந்த நிலையில், குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கர்நாடகா மாநிலம், விஜயபுரா மாவட்டம், லச்சயான் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ் முஜகோண்ட். இவரது 2 வயது ஆண் குழந்தை சாத்விக் முஜகோண்ட். சதீஷ் முஜகோண்டின் 4 ஏக்கர் விவசாய நிலம் வீட்டின் அருகிலேயே உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை குழந்தை சாத்விக் முஜகோண்ட் அங்கு விளையாடிக் கொண்டிருந்த போது, அந்த நிலத்தில் மூடப்படாமல் விடப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றில் குழந்தை தவறி விழுந்தது.
இது குறித்து தகவலறிந்த உள்ளூர் பொலிஸார், வருவாய்த் துறை அதிகாரிகள், பஞ்சாயத்து உறுப்பினர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆழ்துளை கிணற்றின் அருகில் பொக்லைன் மூலம் குழி தோண்டி, குழந்தையை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று மாலை 6.30 மணிக்கு தொடங்கிய மீட்பு பணி, இரவு முழுவதும் தொடர்ந்தது. குழந்தை 15-20 அடி ஆழத்தில் சிக்கி உள்ளதாகவும், அங்கிருந்து கிடைத்த வீடியோ காட்சியில் குழந்தை காலை அசைப்பதும் தெரிய வந்துள்ளது. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் அதே நேரத்தில், குழந்தைக்கு ஆழ்துளை கிணற்றுக்குள் குழாய் வழியாக ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டுள்ளது.
பணிகளை வேகப்படுத்தி, குழந்தையை விரைந்து மீட்க, விஜயபுரா மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும், குழந்தை பெற்றோரிடம் பாதுகாப்பாக மீண்டும் கிடைக்க, பிரார்த்தனை செய்வதாகவும் கர்நாடக அமைச்சர் எம்.பி. பாட்டீல் கூறியுள்ளார். ஆழ்துளை கிணற்றில் குழந்தை விழுந்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது