சேவை ஊழியர்களின் ஊதியம் மீதான வரிகளை நீக்குவதாக நெவாடாவில் கமலா ஹாரிஸ் வாக்குறுதி
அமெரிக்காவின் மேற்கு மாநிலமான நெவாடாவில் பிரசாரம் செய்த அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ், சேவை ஊழியர்களைத் தம் பக்கம் இழுக்க அவர்களுக்கு வழங்கப்படும் உதவிப் பணம் மீதான வருமான வரியைக் குறைக்கும் நடவடிக்கைக்கு ஆதரவு அளிக்கப்போவதாக உறுதி அளித்து உள்ளார்.
அந்த வரிகுறைப்பு என்பது அதிபர் தேர்தலுக்கான குடியரசுக் கட்சி வேட்பாளரும் முன்னாள் அதிபருமான டோனல்ட் டிரம்ப் ஏற்கெனவே அளித்திருந்த வாக்குறுதி.அதனை ஆதரிப்பதாகத் தமது பிரசாரத்தில் குறிப்பிட்ட கமலா ஹாரிஸ், தாம் அதிபராக வென்றால் வரிகுறைப்பைச் செயல்படுத்த இருப்பதாகக் கூறினார்.
நவம்பர் 5 அதிபர் தேர்தலுக்கான மிகவும் முக்கிய மாநிலமாகக் கருதப்படுவது நிவாடா.
ஜனநாயகக் கட்சி வேட்பாளருக்கான நியமனத்தை ஏற்றுள்ள கமலா ஹாரிஸ், துணை அதிபர் வேட்பாளரும் மினசோட்டா ஆளுநருமான டிம் வால்ஸுடன் இணைந்து பல நாள்கள் பிரசாரம் மேற்கொண்டார்.அந்தத் தொடர் பிரசாரத்தின் நிறைவாக ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 11) நெவாடா கூட்டத்தில் அவர் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், “நான் அதிபராகத் தேர்ந்து எடுக்கப்பட்டால் வேலை செய்யும் குடும்பங்களுக்காகத் தொடர்ந்து பாடுபடுவோம் என்று இங்கு உள்ள அத்தனை பேருக்கும் உறுதி அளிக்கிறேன்.
“குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவதும் சேவை மற்றம் விருந்தோம்பல் துறை பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மீதான வரிகளைக் குறைப்பதும் எனது வாக்குறுதிகளுள் அடங்கும்,” என்றார்.
பணவீக்கத்தைக் குறைக்கவும் பணியாற்ற இருப்பதாகச் சொன்ன அவர், சட்டவிரோதமாக விலைகளை ஏற்றும் பெரிய நிறுவனங்கள் மீதும் பாடுபடும் குடும்பங்கள் குடியிருக்கும் வீட்டின் வாடகையை நேர்மையற்ற வகையில் உயர்த்தும் வீட்டு உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அவர் சூளுரைத்தார்.