கமலா ஹாரிஸ்-டிரம்ப் முதல் நேரடி விவாதம்; முக்கிய விடயங்கள்
அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிசும் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் செப்டம்பர் 10ஆம் திகதி இரவு முதல் நேரடி விவாதத்தில் ஈடுபட்டனர்.தொலைக்காட்சி வாயிலாக ஒளிபரப்பட்ட இவ்விவாதம் இந்த ஆண்டின் அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பில் வேட்பாளர்களுக்கு இடையே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒரே விவாதமாகக் கருதப்படுகிறது.
ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிசும் குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனல்ட் டிரம்ப்பும் இதற்குமுன் நேரில் சந்தித்துக்கொண்டதில்லை என்பதால் இருவரும் முதல்முறை பார்க்கும்போது எவ்வாறு நடந்துகொள்வர் என்ற ஆர்வம் பரவலாக இருந்தது.ஹாரிஸ், ஒலிபெருக்கியின்முன் டிரம்ப் நின்றிருந்த இடத்துக்கே சென்று, கைகுலுக்கி, தம்மை அறிமுகப்படுத்திகொண்டார்.பின்னர் விவாதம் சூடுபிடித்தது. பார்வையாளர்கள் டிரம்ப்பின் பேரணிக்குச் சென்றால் அவர் கூறும் இயற்கைக்குப் புறம்பான செய்திகளைக் கேட்கலாம் என்றார் ஹாரிஸ். காற்றாலைகளால் புற்றுநோய் ஏற்படும் என்று டிரம்ப் முன்னர் கூறியதை அவர் சுட்டினார். டிரம்ப் பேரணிக்குச் செல்வோர் சோர்வுடனே திரும்புவர் என்றார் ஹாரிஸ்.
வரலாறு காணாத பெரிய கூட்டம் தமக்குக் கூடும் என்று கூறிய டிரம்ப், ஹாரிஸ் தமது பேரணிக்கு வருகையாளர்களைப் பேருந்து மூலம் கூட்டிச்செல்வதாகச் சாடினார்.மேலும், குடியேறிகள் சட்டவிரோதமாக ஸ்பிரிங்ஃபீல்ட்சில் உள்ள நாய்கள், பூனைகள் போன்ற செல்லப்பிராணிகளைக் கொன்று தின்பதாக டிரம்ப் கூறினார். அதுகுறித்து டிரம்ப்பின் துணை அதிபர் வேட்பாளர் ஜே.டி.வான்ஸ் கூறிய கருத்துகள் முன்னர் சமூக ஊடகங்களில் பரவியது. அது பொய் என்று அந்நகர அதிகாரிகள் ஏற்கெனவே கூறியதை விவாதத்தை வழிநடத்தியோர் சுட்டிக்காட்டினர்.
நேரடி விவாதத்தில் பேசப்பட்ட சில முக்கிய அம்சங்கள்
பொருளாதாரம்
அமெரிக்கர்களின் இலக்குகள், விருப்பங்கள், கனவுகளைத் தாம் அறிந்திருப்பதாகத் ஹாரிஸ் கூறினார். அதனால், வாய்ப்புகள் நிறைந்த பொருளாதாரத்தை உருவாக்கத் தம்மிடம் திட்டம் இருப்பதாக அவர் சொன்னார்.ஆனால் ஜனநாயகக் கட்சியினர் பொருளாதாரத்தை சேதப்படுத்தியதாகச் சாடினார் டிரம்ப். அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் பொதுமக்கள் எளிய உணவுகளைக்கூட வாங்க இயலாமல் மடிவதாக அவர் சொன்னார்.
கருக்கலைப்பு
தாம் அதிபரானால் கருக்கலைப்பு உரிமை தொடர்பான சட்டம் இயற்றப்படும் என்று ஹாரிஸ் கூறினார்.அதன் தொடர்பில் மாநிலங்கள் வாக்களித்து வருவதாகக் கூறிய டிரம்ப், இனி அது மக்களின் வாக்குகளைப் பொறுத்தது என்றும் அமெரிக்க மத்திய அரசாங்கத்தின் பொறுப்பு அன்று எனவும் கூறினார்.
குடியேற்றம்
தேவை இல்லாவிட்டாலும் டிரம்ப் குடியேற்றம் குறித்து அதிகம் பேசுவார் என்று ஹாரிஸ் கூறியதற்குப் பதிலளித்த டிரம்ப், “அமெரிக்காவை நாம் இழந்து வருகிறோம்,” என்றார். சட்டவிரோதக் குடியேறிகளை அவர் சுட்டினார்.
2021 ஜனவரி 6 நாடாளுமன்றத் தாக்குதல்
அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்தில் தமது ஆதரவாளர்கள் நடந்துகொண்ட விதம் குறித்து டிரம்ப் வருந்துகிறாரா என்ற கேள்விக்கு, “என்னை அன்று உரையாற்றும்படி கேட்டுக்கொண்டார்கள். அதைத்தவிர எனக்கும் அன்றைய சம்பவத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை,” என்றார்.
தாம் அன்று நாடாளுமன்றக் கட்டடத்தில் இருந்ததாகக் கூறிய ஹாரிஸ், அப்போது அமெரிக்காவின் அதிபராக இருந்த டிரம்ப் நாடாளுமன்றக் கட்டடத்தைத் தாக்கும்படி வன்முறைக் கும்பல் ஒன்றைத் தூண்டியதாகச் சாடினார்.
தமது அரசாங்கம் விதித்த வரிகளைத் தற்காத்துப் பேசினார் திரு டிரம்ப்.தாம் அதிபரானால் செயல்படுத்தவிருப்பதாகத் டிரம்ப் முன்வைக்கவிருக்கும் ‘புரோஜெக்ட் 2025’ திட்டம் அபாயகரமானது என்றார் ஹாரிஸ்.