விடுதலையானவுடன் பிரிட்டனை விட்டு வெளியேறிய ஜூலியன் அசாஞ்சே : விக்கிலீக்ஸ்
பிரிட்டனில் ஐந்து ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த விக்கிலீக்ஸ் இணையத்தள நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே விடுதலை செய்யப்பட்டுள்ளார்.அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அனைவருக்கும் அவரது மனைவி ஸ்டெல்லா ஜூன் 24ஆம் திகதி நன்றி தெரிவித்தார்.
லண்டனின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் பெல்மார்ஷ் உயர்-பாதுகாப்புச் சிறைச்சாலையிலிருந்து அசாஞ்சே வெளியேறியது உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, “ஜூலியன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்!!!” என்று எக்ஸ் தளத்தில் ஸ்டெல்லா பதிவிட்டுள்ளார்.“உலகளாவிய நிலையில் அவரது விடுதலையை வலியுறுத்தி ஆதரவளித்த அனைவருக்கும் எங்கள் நன்றியின் அளவைச் சொற்களால் விவரிக்க இயலாது,” என்று ஸ்டெல்லா கூறியுள்ளார்.
முன்னதாக பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சுவீடனுக்கு நாடுகடத்தப்படுவதைத் தவிர்க்க லண்டனில் உள்ள எக்குவடோர் தூதரகத்தில் அசாஞ்சே அடைக்கலம் நாடியிருந்தபோது ஸ்டெல்லா அவரைச் சந்தித்தார். அந்தக் குற்றச்சாட்டுகள் பின்னர் கைவிடப்பட்டன.
ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் அமெரிக்கா மேற்கொண்ட போர்கள் தொடர்பான ராணுவ ரகசியங்களை அம்பலப்படுத்தியதாக அசாஞ்சே மீது குற்றம் சாட்டப்பட்டது. நாடு கடத்தப்படுவதற்கு எதிரான அவரது மேல்முறையீட்டு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதை அடுத்து ஜூலை மாதம் அவர் லண்டன் நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொள்வார் என்று கூறப்பட்டது.ஆனால் விக்கிலீக்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “ஜூலியன் அசாஞ்சே விடுதலை செய்யப்பட்டுள்ளார். பெல்மார்ஷ் சிறையில் 1,901 நாள்கள் அடைக்கப்பட்டிருந்த அவர் ஜூன் 24ஆம் திகதி காலை அங்கிருந்து வெளியேறினார்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
“லண்டன் உயர் நீதிமன்றம் அவருக்குப் பிணை வழங்கியதை அடுத்து பிற்பகலில் ஸ்டேன்ஸ்டெட் விமான நிலையத்தில் விடுவிக்கப்பட்டார். அங்கிருந்து விமானம் வழியாக அவர் பிரிட்டனை விட்டு வெளியேறினார்,” என்று அந்த அறிக்கை கூறுகிறது.
அடித்தள ஆதரவாளர்கள் முதல் அரசியல் தலைவர்கள், ஐக்கிய நாட்டு நிறுவனம் வரை, தொடர்ந்து மேற்கொண்ட பிரசாரம், அமெரிக்க நீதித் துறையுடன் நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைக்கு வித்திட்டதாகவும் பின்னர் அதன் தொடர்பில் ஒப்பந்தம் ஏற்பட்டதாகவும் அது கூறியது.ஒப்பந்தம் இன்னும் அதிகாரபூர்வமாக உறுதிசெய்யப்படவில்லை என்று விக்கிலீக்ஸ் குறிப்பிட்டது.
“அதிகாரத்தில் உள்ளவர்களுக்குத் தொடர்புடைய அரசாங்க ஊழல், மனித உரிமை மீறல்கள் போன்ற நடவடிக்கைகளை விக்கிலீக்ஸ் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது.“அதன் முதன்மை ஆசிரியர் என்ற முறையில் ஜூலியன் இதற்காவும் மக்களின் தகவலறியும் உரிமைக்காகவும் கொடுத்த விலை மிக அதிகம்.“அவர் ஆஸ்திரேலியா திரும்பும் வேளையில், எங்களுக்கு ஆதரவு தந்த, எங்களுக்காகப் போரிட்ட அனைவருக்கும் நன்றி,” என்று விக்கிலீக்சின் அறிக்கை கூறியது.