வாழ்க்கையில் எதை இழந்தாலும் இதை மட்டும் இழக்காதீங்க! – ரவி மோகன்.
சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரவி மோகன், தனது வாழ்க்கையில் நடந்த போராட்டங்கள் மற்றும் சுயமரியாதை குறித்துத் துணிச்சலாகப் பேசினார்.
இந்தத் திரைப்படத்தில் ரவி மோகன் ஒரு முக்கியமான வில்லன் பாத்திரத்தில் நடித்துள்ளார். “நீங்கள் ஏன் இன்னொரு ஹீரோவின் படத்தில் வில்லனாக நடிக்கிறீர்கள்?” எனப் பலரும் கேட்டதாக அவர் தெரிவித்தார். அதற்கு அவர் அளித்த விளக்கம்
“இந்தத் திரைப்படத்தில் நான் நடித்ததற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு. ஒன்று திரைக்கதை மற்றும் இயக்குநர் சுதா கொங்கரா மேம். மற்றொன்று, இப்படம் பேசும் சுயமரியாதை (Self-respect).”
“வாழ்க்கையில் நாம் எதை வேண்டுமானாலும் விட்டுக்கொடுக்கலாம், ஆனால் சுயமரியாதையை மட்டும் யாருக்காகவும், எதற்காகவும் இழக்கக் கூடாது.” “எனது சொந்த வாழ்க்கையிலிருந்து சுயமரியாதை எவ்வளவு முக்கியம் என்பதை நான் கற்றுக் கொண்டேன். முதுகில் அடிப்பவர்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை, எதிரில் இருப்பவர்களைப் பற்றித்தான் கவலை.”
“அனைவருக்கும் ஒரு அண்ணனாகச் சொல்கிறேன், எக்காரணம் கொண்டும் உங்கள் சுயமரியாதையை இழந்துவிடாதீர்கள்.”
என்று தனது சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களைச் சுட்டிக்காட்டிப் பேசினார்
பின்னர் நடிகர் சிவகார்த்திகேயனின் கடின உழைப்பைப் பாராட்டிய அவர், “பின்புலம் ஏதுமின்றி தனது ரசிகர்களின் ஆதரவோடு மட்டுமே சிவகார்த்திகேயன் இன்று இந்த உயரத்தை எட்டியுள்ளார்” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.





