நிலவின் சுற்றுவட்டப் பாதையை எட்டியது ஜப்பானின் ஸ்லிம் விண்கலம் (வீடியோ)
நிலவை ஆராய்வதற்கான ஜப்பானின் முன்னெடுப்பாக ஏவப்பட்ட ’ஸ்லிம்’ விண்கலம் வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஜாக்ஸா, நிலவு ஆய்வுக்காக ‘ஸ்லிம்'(SLIM) எனப்படும் விண்கலத்தை தயார் செய்தது. ஆனால் திட்டமிட்டபடி ஏவுவதில் பல தடைகள் எழுந்தன. மோசமான வானிலை உள்ளிட்ட காரணங்களினால் மொத்தம் 3 முறை ஸ்லிம் விண்கலம் விண்ணில் ஏவப்படுவது ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னர் செப்டம்பர் 7 அன்று தனேகாஷிமா விண்வெளி மையத்தில் இருந்து ஸ்லிம் விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
ஜனவரி 20 அன்று அதிகாலை நிலவில் ஸ்லிம் தரையிறங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தரையிறங்கலில் திட்டமிடப்பட்டுள்ள துல்லியம் காரணமாக இது ’மூன் ஸ்னைப்பர்’ என்றும் அழைக்கப்படுகிறது. ஸ்னைப்பர் எனப்படும் தொலைதூரத்திலிருந்து குறிபார்த்து சுடுவதற்கான துப்பாக்கி போல, ஸ்லிம் விண்கலத்தின் தரையிறங்கும் நடவடிக்கையில் துல்லியம் திட்டமிடப்பட்டுள்ளது.
https://twitter.com/i/status/1699569065323278673
சந்திரயான் தரையிறங்குவதற்கான பரப்பு 4கிமீX2.4கிமீ என்பதாக திட்டமிடப்பட்டிருந்தது; ஆனால் ஸ்லிம் 100மீ பரப்புக்குள் தனது தரையிறங்கலுக்குத் தயாராகிறது. சந்திரனுக்கான முந்தைய விண்கலன்களில் இருந்து ஜப்பானின் ஸ்லிம் இந்த வகையிலும் வேறுபடுகிறது. ஜப்பானின் இந்த திட்டம் வெற்றிபெற்றால், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா தேசங்களைத் தொடர்ந்து, 5வது நாடாக ஜப்பானும் சந்திரன் ஆய்வுக்கான தனது வெற்றியை உறுதி செய்யும்.
சந்திரனின் சுற்றுவட்டப் பாதையில் நேற்று மாலை நிலைநிறுத்தப்பட்ட ஸ்லிம், தற்போது நீள்வட்டத்தில் நிலவை சுற்ற ஆரம்பித்துள்ளது. சந்திரனுக்கு அருகில் 600 கிமீ மற்றும் தொலைவில் 4,000 கிமீ என்பதாக இந்த நீள்சுற்றுவட்டப்பாதை அமைந்திருக்கிறது. இறுதியாக ஜனவரி 19 அன்று தனது லேண்டரை நிலவின் பரப்பில் தரையிறக்குவதற்கான ஏற்பாடுகளை ஸ்லிம் தொடங்கும். சந்திரன் நெருக்கத்தில் 15 கிமீ தொலைவில் இருந்தபடி, நிலவை நோக்கி லேண்டர் தாவும். இந்திய நேரப்படி ஜனவரி 20 அன்று அதிகாலை 12.20 மணியளவில் சந்திரன் பரப்பில் ஸ்லிமின் லேண்டர் தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளது