தேர்தலில் படுதோல்வியடைந்த போதிலும், பதவியில் நீடிக்க உறுதியளித்துள்ள ஜப்பான் பிரதமர்

ஜப்பானில் நடைபெற்ற மேலவைத் தேர்தலில் ஆளும் கூட்டணி படுதோல்வி அடைந்தது. இதையடுத்து, கூட்டணிக்குத் தலைமை தாங்கிய ஜப்பானியப் பிரதமர் ஷிகெரு இஷிபா, தமது கட்சியிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.இருப்பினும், பிரதமர் பதவியில் தொடர்ந்து இருக்கப்போவதாக இஷிபா தெரிவித்துள்ளார். அமெரிக்க வரிவதிப்பு தொடர்பான பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள இருப்பதாக அவர் கூறினார்.
அதுமட்டுமல்லாது, அதிகரித்து வரும் பயனீட்டாளர் விலை போன்ற முக்கிய விவகாரங்களைக் கண்காணித்து தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இலக்கு கொண்டுள்ளதாக இஷிபா தெரிவித்தார்.
இஷிபா தொடர்ந்து பிரதமராக இருப்பது குறித்து அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆராய்ந்து வருகின்றனர். அதே சமயம், இஷிபாவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு நடத்துவது குறித்து எதிர்க்கட்சிகள் பரிசீலனை செய்து வருகின்றன.
இஷிபாவின் பதவிக்காலம் நீடிக்காது என்று அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு நடைபெற்ற கீழவைத் தேர்தலிலும் அவரது கட்சி தோல்வி அடைந்ததை அவர்கள் சுட்டினர். எனவே, மேலவையைவிட அதிக அதிகாரம் கொண்ட கீழவை திரு இஷிபாவின் கட்டுப்பாட்டில் இல்லை.
அடுத்த சில மாதங்களில் ஜப்பானில் தனைமைத்துவ மாற்றம் ஏற்படக்கூடும் அல்லது ஆளும் கூட்டணியில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்று பொருளியல் நிபுணர் நொரிஹிரோ யமாகுச்சி தெரிவித்தார்.இருப்பினும், அமெரிக்க வரிவிதிப்பு தொடர்பான பேச்சுவார்த்தையை நிறைவு செய்யும் வரை இஷிபா பிரதமராக நீடிக்கக்கூடும் என்றார் அவர்.
ஜப்பான் மீது அமெரிக்கா விதித்துள்ள வரியை இஷிபாவால் இன்னும் குறைக்கவோ தவிர்க்கவோ முடியவில்லை என்றும் ஜப்பானிய வாக்காளர்களை இது அதிருப்தி அடைய செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.நடந்து முடிந்த மேலவைத் தேர்தலில் இஷிபாவின் எல்டிபி கட்சியும் கூட்டணிக் கட்சியான கொமெய்ட்டோவும் பெரும்பான்மை பெறவில்லை. அவை 47 இடங்களை மட்டுமே வென்றன.
முக்கிய எதிர்க்கட்சியான அரசியலமைப்பு ஜனநாயகக் கட்சியின் தலைவர் திரு யோஷிஹிகோ நோடா, இஷிபா நிர்வாகத்தின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் தாக்கல் செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக ஜூலை 20ஆம் தேதி கூறினார். ஏனெனில் மேலவைத் தேர்தலின் முடிவு வாக்காளர்களின் நம்பிக்கையை ஆளும் கட்சி இழந்துள்ளது என்பதைக் காட்டுகிறது என்றார் அவர்.