வடக்கு – கிழக்கு கல்வி மேம்பாட்டிற்கு ஜப்பான் நிதியுதவி
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கல்வித்துறை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும், மனிதப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் ஜப்பானிய அரசாங்கம் 32 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நிதியை நன்கொடையாக வழங்கியுள்ளது.
கிளிநொச்சியில் புதிய சிறுவர் அபிவிருத்தி நிலையம் ஒன்றை அமைத்தல் மற்றும் காத்தான்குடி பகுதியில் போஷாக்கு உணவு வசதிகளை மேம்படுத்தும் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் இதில் உள்வாங்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நிகழ்வு, இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் அகியோ இசொமடா (Akio Isomata) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
திட்டங்களின் முக்கிய அம்சங்கள்,
கிளிநொச்சி திட்டம் – பாலர் பாடசாலை வகுப்பறைகள், தகவல் தொழில்நுட்ப அலகுகள் மற்றும் தங்குமிட வசதிகளுடன் கூடிய புதிய அபிவிருத்தி நிலையம் ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது.
இதன் மூலம் பொருளாதார சிரமங்கள் மற்றும் குடும்ப வன்முறைகளை எதிர்கொள்ளும் பெண் பிள்ளைகளைப் பாதுகாத்து, அவர்களின் கல்வி உரிமையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
காத்தான்குடி திட்டம் – காத்தான்குடி மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 2100 மாணவர்களின் போஷாக்குத் தேவைகளைப் பூர்த்தி செய்தல் உள்ளிட்ட பல பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
ஜப்பான் அரசாங்கம் 1989ஆம் ஆண்டு முதல் இலங்கையில் இவ்வாறான அடிமட்ட மனிதப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக (GGP) இதுவரை 62 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





