ஜனநாயகன் VS பராசக்தி: ரிலீஸ் மோதல் குறித்து உண்மையை உடைத்த தியேட்டர் அதிபர்!
விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ மற்றும் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ ஆகிய திரைப்படங்கள் பொங்கலுக்கு நேருக்கு நேர் மோதுவது குறித்த விவாதங்களுக்கு, திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தனது பேட்டியில் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இப்படியான படவெளியிட்டு மோதல்கள் ஒரு பெரிய விஷயமேஇல்லை, இரண்டு பெரிய படங்கள் ஒன்றாக வெளியாவது இது முதன்முறையும் அல்ல என்று அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் அவர்கூறுகையில் “இதே மாதிரி கடந்த காலங்களில் வாரிசு – துணிவு, விஸ்வாசம் – பேட்டை போன்ற படங்கள் ஒன்றாக வெளியாகவில்லையா? அன்றும் இதே கேள்விகள் கேட்கப்பட்டன. பண்டிகை காலங்களில் இரண்டு படங்கள் வெளியாவது இயல்பான ஒன்று,” என்று அவர் கூறினார்.
சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ திரைப்படம் முதலில் ஜனவரி 14-ம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், தற்போது ஜனவரி 10-க்கு மாற்றப்பட்டுள்ளது.
இதற்கு காரணம் ஜனவரி 9 முதல் விடுமுறை தொடங்குவதால், திரையரங்குகளில் அந்தப் படத்தை முன்கூட்டியே திரையிடுவது வணிக ரீதியாக நல்லது எனத் திட்டமிடப்பட்டது. இதில் எவ்வித உள்நோக்கமும் இல்லை என அவர் தெளிவுபடுத்தினார்.
மேலும் அவர் கூறுகையில் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் இன்னும் கிடைக்காதது குறித்த சந்தேகங்களுக்கு அவர் விளக்கமளிக்கையில் சென்சார் போர்டு சொன்ன சில மாற்றங்கள் (Cuts) செய்யப்பட்டுள்ளன. அதைச் சரிபார்த்து முடிக்கையில் சனி, ஞாயிறு விடுமுறை வந்ததால் தாமதமாகியுள்ளது .
இன்று இரவு அல்லது நாளைக்குள் ‘ஜனநாயகன்’ படத்திற்குத் தேவையான சான்றிதழ் கட்டாயம் கிடைத்துவிடும். அதில் சிக்கல் எதுவும் இருப்பதற்கு வாய்ப்பில்லைஎன்று தெரிவித்தார்.
மேலும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் பராசக்திக்கு அதிக திரையரங்குகளைக் கொடுத்திருப்பதாக வரும் வதந்திகளை அவர் மறுத்துள்ளார்.உண்மையில் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்குத்தான் அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இப்படம் அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளதாலும், விஜய்யின் கடைசிப் படம் என்பதாலும் வசூலில் ‘ஜனநாயகன்’ மிகப்பெரிய சாதனையைப் படைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.




