“அலையோடு உறவாடு”: காங்கேசன்துறை கடற்கரையில் கோலாகலமாகத் தொடங்கிய உணவுத் திருவிழா
யாழ்ப்பாணம், காங்கேசன்துறை கடற்கரையில் “அலையோடு உறவாடு” எனும் மகுட வாசகத்துடன் மாபெரும் உணவுத் திருவிழா இன்று கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.
வடமாகாண சுற்றுலாப் பணியகம் மற்றும் வலி. வடக்கு பிரதேச சபை ஆகியவை இணைந்து இந்த விசேட நிகழ்விற்கு ஏற்பாடு செய்துள்ளன.
வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் தலைமையில் இன்று காலை ஆரம்பமான இந்தத் திருவிழா, இரவு வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது.
இதில் எமது மண்ணின் பாரம்பரிய உணவுகள், உள்ளூர் உற்பத்திப் பொருட்களின் விற்பனைச் சந்தை மற்றும் கண்கவர் பண்பாட்டு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
இவற்றுடன் சிறுவர்களுக்கான மகிழ்வூட்டும் விளையாட்டுக்கள் மற்றும் மாலை வேளையில் இடம்பெறவுள்ள பிரம்மாண்டமான இன்னிசை கச்சேரி என்பனவும் மக்களைக் கவரும் வகையில் அமையவுள்ளன.
உள்ளூர் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலும், உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும் இந்தத் திருவிழா முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





