யாழ்ப்பாண ஒப்பந்தம்: விவசாயிகளை தொழில்முனைவோராக மாற்ற புதிய திட்டம்.
விவசாயிகளுக்கு அவர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கப் பெறுவதுடன், அவர்கள் வெறும் உற்பத்தியாளர்களாக மட்டும் நின்றுவிடாமல் தொழில்முனைவோராகவும் மாற்றமடைய வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
இலங்கை விவசாயத் தொழில்முனைவோர் மன்றத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாண சேதன விவசாய பொது பட்டியலிடப்படாத நிறுவனம் மற்றும் அக்ரோ பெனிபிட் லங்கா லிமிடெட் ஆகியவற்றுக்கு இடையிலான முகாமைத்துவ மற்றும் செயற்பாட்டு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டது.

புத்தூரில் அமைந்துள்ள வாழை மற்றும் மாம்பழ சேகரிப்பு மற்றும் பதப்படுத்தல் நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், விவசாயிகளுக்கான முறையான சந்தை வாய்ப்பு இல்லாமைக்கே இந்த ஒப்பந்தம் ஒரு தீர்வு எனக் குறிப்பிட்டார்.
இது ஒரு பரீட்சார்த்தமான மற்றும் முன்னோடியான முயற்சி எனக் குறிப்பிட்ட அவர், உற்பத்திப் பொருட்களின் தரத்தைப் பேணுவதன் மூலமும், தொடர்ச்சியான விநியோகத்தை உறுதி செய்வதன் மூலமுமே இத்திட்டத்தை வெற்றியடையச் செய்ய முடியும் என்றும், அதன் வெற்றி விவசாயிகளின் கைகளிலேயே தங்கியுள்ளது என்றும் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் இலங்கை விவசாயத் தொழில்முனைவோர் மன்றத்தின் செயலாளர் கலாநிதி செல்வநாதன் அனோஜன் மற்றும் மாகாண விவசாய அதிகாரிகள், விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்





