யாழ்.படகு விபத்து: உயர்மட்ட விசாரணைக்கு பணிப்பு!
யாழ். படகு விபத்துக்கான முழுமையான காரணங்களை கண்டறிவதற்குரிய அவசர விசாரணை முன்னெடுக்குமாறு கடற்படையினரும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரால் Ramalingam Chandrasekar இது தொடர்பான அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு அமைச்சர் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.
துயரத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு அரசாங்கம் சார்பில் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
விபத்துக்குள்ளான படகு பயணத்திற்கு பாதுகாப்பான நிலையில் இருந்ததா, பயணிகளின் எண்ணிக்கை விதிமுறைகளுக்கு உட்பட்டதா, கடல் பயணத்திற்கான பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டனவா என்பன குறித்து விரிவாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடமும், பொலிஸார் மற்றும் கடற்படையினருடன் அமைச்சர் அவசர கலந்துரையாடலையும் மேற்கொண்டுள்ளார்.
கடலில் சிக்கியிருக்கக்கூடியவர்களை தேடும் மற்றும் மீட்கும் பணிகளை தீவிரப்படுத்துமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், மீட்பு நடவடிக்கைகளில் எந்தவித தாமதமும் ஏற்படாத வகையில் அனைத்து வளங்களையும் பயன்படுத்துமாறும் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேவேளை, பாதிக்கப்பட்ட மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலை அதிகாரிகளுடனும் அமைச்சர் தொடர்புகொண்டு அவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்துள்ளார்.





