யாழில். பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு எதிராக 34 குற்றச்சாட்டு – சீல் வைக்கமாறு உத்தரவு
யாழ்ப்பாணத்தில் சுகாதார நடைமுறைகளை மீறிய பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு எதிராக 34 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில்
உரிமையாளர் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதை அடுத்து அவருக்கு ஒரு இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் தண்டபணம் விதிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை பலசரக்கு கடை ஒன்றுக்கு எதிராக 13 குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்ட நிலையில் ,
கடை உரிமையாளரும் தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதை அடுத்து , கடை உரிமையாளருக்கு 65 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகள் , உணவு கையாளும் நிலையங்கள்
என்பவற்றின் மீது கடந்த 22 ஆம் திகதி பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அதன் போது , சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க தவறியமை , உரிய முறையில் களஞ்சியப்படுத்தப்படாதமை , காலாவதியான பொருட்களை விற்பனைக்கு காட்சிப்படுத்தியிருந்தமை , மனித பாவனைக்கு உகந்ததல்லாத பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் பல்பொருள் அங்காடி மற்றும் கடை ஒன்றிற்கு எதிராக சுகாதார பரிசோதகர்களால் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு எதிராக 34 குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டன.
தன் மீதான அத்தனை குற்றச்சாட்டுக்களையும் உரிமையாளர் ஏற்றுக்கொண்டதை அடுத்து , உரிமையாளரை எச்சரித்த மன்று ஒரு இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்ததுடன் , சுகாதார பரிசோதகரால் அடையாளப்படுத்தப்பட்ட சீர்கேடுகளை சீர் செய்யும் வரை பல்பொருள் அங்காடிக்கு சீல் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.
அதனை தொடர்ந்து பலசரக்கு கடை உரிமையாளர் மீது 13 குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்ட நிலையில் அவரும் தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களையும் ஏற்றுக்கொண்டதை அடுத்து கடை உரிமையாளரை எச்சரித்த மன்று 65 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்ததுடன் , சுகாதார பரிசோதகரால் அடையாளப்படுத்தப்பட்ட சீர்கேடுகளை சீர் செய்யும் வரை கடைக்கு சீல் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.





