மன்னாரில் யாழை சேர்ந்த வைத்தியர் உண்ணாவிரதம்
சிந்துஜாவின் மரணத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தை சேர்ந்த வைத்தியர் செந்தூரன் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரத போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
சிந்துஜாவின் மரணத்துடன் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து குறித்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
இதேவேளை, மன்னாரில் சிந்துஜாவிற்கு நீதி கேட்டு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஜனநாயகப் போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த மாதம் 28 ஆம் திகதி உயிரிழந்த திருமதி சிந்துஜா மரியராஜின் மரணம் தொடர்பாக ஆரம்ப கட்ட விசாரணைகள் நடைபெற்று ஒரு வாரம் கடந்த போதும் இதுவரை எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
தாமதிக்கும் நீதி மறக்கப்பட்ட நீதியாகவே நாம் கருதுகிறோம். ஆகவே வைத்தியசாலையின் பொறுப்பற்ற செயற்பாட்டினால் இறந்தவருக்கு நீதி வேண்டும். இப்படி இன்னொரு கொலை நடைபெறக்கூடாது.
எனவே குற்றம் சாட்டப்பட்டவர்களை பாதுகாக்க நினைக்கும் மத்திய மற்றும் மாகாண சுகாதார அதிகாரிகளுக்கு எதிராக சிந்துஜாவிற்கு நீதி வேண்டி கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற உள்ளதால் இப் போராட்டத்தில் தார்மீக அடிப்படையில் கலந்து கொள்ளுமாறு மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் அனைத்து தரப்பினரையும் அழைப்பு விடுத்துள்ளனர்.
குறித்த போராட்டம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக இடம் பெற உள்ளதாகவும் அவ் அமைப்பின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.