எலான் மஸ்க்கை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது – கடுமையாக விமர்சித்த டிரம்ப்

எலான் மஸ்க் புதிய அரசியல் கட்சி தொடங்கிய விடயம் வெளியான தகவல்கள், அமெரிக்க அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி என்ற இருபெரும் கட்சிகளே பிரதானமாகச் செயல்பட்டு வரும் நிலையில், மூன்றாவது ஒரு கட்சி உருவாவது குழப்பத்தையும், தேவையற்ற மோதல்களையும் உருவாக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
“எலான் மஸ்க் தனது கட்டுப்பாட்டை முற்றிலும் இழந்துவிட்டார். அவரைப் பார்க்கும்போது எனக்குப் பரிதாபமாக இருக்கிறது” என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஐந்து வாரங்களாக அவரது நடவடிக்கைகள் மிகவும் வருந்தத்தக்க வகையில் உள்ளன. மின்சார வாகனங்களை வாங்குவது கட்டாயம் என்ற விதியை நாங்கள் சமீபத்தில் ரத்து செய்தோம். இதனால், மக்கள் இனிமேல் பெட்ரோல், ஹைப்ரிட் அல்லது பிற தொழில்நுட்ப வாகனங்களை சுதந்திரமாக வாங்கலாம். ஆனால், டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க்கிற்கு இது பிடிக்கவில்லை. குறுகிய காலத்தில் அனைவரும் எலெக்ட்ரிக் கார்களை வாங்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
மேலும், தனது நண்பர் ஒருவரை நாசா தலைவராக நியமிக்க எலான் மஸ்க் விரும்பினார். ஆனால், அவர் ஜனநாயகக் கட்சி ஆதரவாளர் என்பதால் நாங்கள் எதிர்த்தோம் என காட்டமாகத் தெரிவித்துள்ளார். டிரம்பின் இந்த வெளிப்படையான தாக்குதல், இருவருக்கும் இடையேயான மோதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.