விருந்து வைத்தது உண்மைதான்: சர்ச்சை வீடியோ குறித்து ஹிருணிக்கா விளக்கம்!
ஐக்கிய மக்கள் சக்தியின் (SJP) உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர Hirunika Premachandra விருந்துபசாரமொன்றின்போது ஆடும் வீடியோ சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாகியுள்ளது.
கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டதாலதான் அவர் விருந்து வைத்து, கொண்டாடுகின்றார் என சிலர் கருத்து வெளியிட்டுவருகின்றனர்.
இந்நிலையில் இந்த வீடியோ தொடர்பில் ஹிருணிக்கா பிரேமசந்திர விளக்கமளித்துள்ளார். அவர் கூறியவை வருமாறு,
“ நானும்,எனது தொகுதி அமைப்பாளர் உள்ளிட்ட கட்சி செயற்பாட்டாளர்கள் பங்கேற்ற நிகழ்வொன்று தொடர்பான வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
கடுவலை தொகுதியில் ஐக்கிய மக்கள் சக்தியின் பதவிநிலைகள் வருடாந்தம் புதுப்பிக்கப்படும். கட்சி தலைவர், செயலாளர் உள்ளிட்டவர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
நிகழ்வின் முடிவில் இரவில் விருந்துபசாரம் வழங்கப்பட்டது. அதன்பின்னர் நாம் ஆடி, பாடி மகிழ்ந்தோம்.
கடந்த ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியே இந்நிகழ்வு இடம்பெற்றது. எனினும், கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டதை ஹிருணிக்கா தரப்பு கொண்டாடுகின்றது என போலி பிரச்சாரம் தற்போது முன்னெடுக்கப்படுகின்றது.
இந்த சேறுபூசும் பிரச்சாரம் எனக்கு பிரச்சிலை இல்லை. ஆனால் எமது கட்சியில் உள்ள ஏனையோருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதாலேயே இந்த விளக்கத்தை வழங்குகின்றேன்.
நான் கடுவலை தொகுதி ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளர். கடுவலை மாநகரசபைதான் எனக்குரியது. எனவே, கொழும்பு மாநகரசபைக்கும், எனக்கும் தொடர்பு இல்லை.
இரவில் விருந்து வைத்தது உண்மைதான். ஆட்டம் போட்டோம். இதை சொல்வதற்கு நாம் தயங்கப்போவதில்லை. என்பிபி காரர்கள்போல் நாம் பொய்யுரைப்பதில்லை.
அதனால் இந்த நிகழ்வுக்கும், கொழும்பு மாநகரசபை பாதீட்டுக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை.” – என்றார் ஹிருணிக்கா.





