அது இன்னும் பயன்பாட்டில்தான் உள்ளது – அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல
பேராதனை போதனா வைத்தியசாலையில் சமீபத்தில் 21 வயது யுவதியின் மரணத்துக்கு காரணமாக இருந்த மருந்தானது, இன்னும் வைத்தியசாலைகளில் பயன்பாட்டிலுள்ளதாகவும் நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் குறித்த மருந்தின் 66,000 குப்பிகள் கையிருப்பிலுள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
குறித்த மருந்தின் 145,930 குப்பிகள் வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 79,260 குப்பிகள் இதுவரை பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இந்த மருந்து 2013 ஆம் ஆண்டு இலங்கையில் பதிவு செய்யப்பட்டதாகவும் 20 வருடங்களாக அது பாவனையில் உள்ளதாகவும், உலகப் புகழ்பெற்ற நிறுவனமொன்று இதனை இறக்குமதி செய்துள்ளதாகவும் கூறினார்.
தரம் குறைந்த மருந்துகளே மரணத்திற்குக் காரணம் என்ற குற்றச்சாட்டுகளை நான் மறுக்கிறேன். இலவச சுகாதரத்துறையை நாசம் செய்ய நினைப்பவர்களால் தான் இவ்வாறு குற்றஞ்சாட்டப்படுகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த பெண்ணின் மரணத்திற்கு காரணமாகக் கருதப்பட்ட குறிப்பிட்ட தொகுதி மருந்துகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டில் பயன்படுத்தப்படும் 14 உயிர்காக்கும் மருந்துகளும் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை போதுமான அளவு கையிருப்பில் இருப்பதாகவும், 850 மருந்துகளில் 273 அத்தியாவசிய மருந்துகளுக்கு பற்றாக்குறை இருப்பதாகவும் ரம்புக்வெல்ல கூறினார்.
அவற்றில் 39 அத்தியாவசிய மருந்தகள் இன்று கிடைக்கப்பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.