அனைத்து குழந்தைகளின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்துவது எமது கூட்டுப் பொறுப்பு – பிரதமர் ஹரிணி!
அனைத்து குழந்தைகளின் பாதுகாப்பையும், பின்னணி அல்லது சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல், எந்தக் குழந்தையையும் விட்டுவிடாமல், அவர்களின் பொருளாதார, சமூக மற்றும் மன நலனைப் பாதுகாப்பதும் நமது கூட்டுப் பொறுப்பாகும் என்று பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய கூறினார்.
அலரி மாளிகையில் சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு இன்று (01.10) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், எதிர்கால சந்ததியினர் சுதந்திரமாக வாழ்வதற்கு குழந்தைகளுக்கு உகந்த சூழலை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இந்நிகழ்வின்போது உலக சிறுவர்கள் தின நினைவு முத்திரை மற்றும் தபால்தலை வெளியிடப்பட்டது. அத்துடன் நிகழ்வில் கலந்துகொண்ட சிறுவர்களுக்காகப் பல்வேறு செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட விசேட நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.





