இஸ்ரேலின் மூலோபாய விவகார அமைச்சர் ரான் டெர்மர்(Ron Dermer) பதவி விலகல்
காசா போரின் போது பேச்சுவார்த்தைகளில் முன்னணிப் பங்காற்றியவரும், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின்(Benjamin Netanyahu) நெருங்கிய நம்பிக்கையாளருமான இஸ்ரேலின் மூலோபாய விவகார அமைச்சர் ரான் டெர்மர்(Ron Dermer) பதவி விலகியுள்ளார்.
“மூலோபாய விவகார அமைச்சர் பதவியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எனது முடிவை உங்களுக்குத் தெரிவிக்க நான் விரும்புகிறேன் ” என்று டெர்மர் ஊடகங்களுக்கு வெளியிட்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதை தொடர்ந்து அந்த கடிதத்தில், 2022ம் ஆண்டு டிசம்பரில் அரசாங்கத்தில் சேர்ந்தபோது தனது குடும்பத்தினருக்கு இரண்டு ஆண்டுகள் மட்டுமே அமைச்சராக பணியாற்றுவேன் என்று உறுதியளித்ததை தற்போது நான் நிறைவேற்றியுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “எனது எதிர்காலம் என்னவாக இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒன்று எனக்குத் உறுதியாகத் தெரியும், நான் செய்யும் எல்லாவற்றிலும் யூத மக்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க எனது பங்களிப்பைத் தொடர்ந்து செய்வேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தனக்கு சேவை செய்ய வாய்ப்பளித்ததற்காக பிரதமர் நெதன்யாகுவுக்கு ரான் டெர்மர் நன்றி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் பிறந்த ரான் டெர்மர், நெதன்யாகுவின் நெருங்கிய ஆலோசகர் ஆவார், மேலும் அமெரிக்காவுடனான உறவுகள், காசா போரின் போது பணயக்கைதிகள் பேச்சுவார்த்தைகள் மற்றும் அதன் அரபு அண்டை நாடுகளுடனான இஸ்ரேலின் உறவுகள் உள்ளிட்ட பல்வேறு இராஜதந்திர பிரச்சினைகளைக் கையாண்டுள்ளார்.




