ட்ரம்ப்பின் ‘அமைதி வாரியத்தில்’ நெதன்யாகு: காசா போர் நிறுத்தத்தில் புதிய திருப்பம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான புதிய ‘அமைதி வாரியத்தில்’ (Board of Peace) இணைவதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
ஆரம்பத்தில் காசா போர் நிறுத்தத்தை மேற்பார்வையிட உருவாக்கப்பட்ட இந்த வாரியம், தற்போது உலகளாவிய மோதல்களைத் தீர்க்கும் அமைப்பாக மாற்றப்பட்டு வருகிறது.
இதில் ஐக்கிய அரபு அமீரகம், ஹங்கேரி, அர்ஜென்டினா உள்ளிட்ட பல நாடுகள் ஏற்கனவே இணைந்துள்ளன.
இந்த வாரியத்தில் நிரந்தர உறுப்பினராக இருக்க 1 பில்லியன் டொலர் பங்களிப்பு கோரப்பட்டுள்ளதுடன், அந்தத் தொகை காசாவை மறுசீரமைக்கப் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிற்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மாநாட்டில் கருத்து தெரிவித்த ட்ரம்ப், இந்த வாரியம் ஐநா-வுக்கு மாற்றாக அமையுமா என்ற கேள்விக்கு “இருக்கலாம்” எனப் பதிலளித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு பிரான்ஸ் போன்ற நாடுகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
அதேவேளை, காசாவின் பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்தை மேற்பார்வையிட ‘காசா நிறைவேற்று வாரியம்’ என்ற தனி அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் சர்வதேச இராஜதந்திரிகளுடன் இஸ்ரேலிய மற்றும் அரபு நாட்டுப் பிரதிநிதிகளும் இடம்பெற்றுள்ளனர்.





