அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்பு அயன் பீம்மை பயன்படுத்தும் இஸ்ரேல்
பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இப்போர் ஒரு ஆண்டுக்கும் மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. அதே போல் லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் மீதும் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் அடிக்கடி ஏவுகணைகளை வீசி தாக்குகிறார்கள்.
இதற்கிடையே ஈரானும் சமீபத்தில் இஸ்ரேல் மீது வான்வழித் தாக்குதலை நடத்தியது.
ஏவுகணை உள்ளிட்ட வான்வழித் தாக்குதலை தடுக்க இஸ்ரேல் அயன் டோம் என்ற வான் பாதுகாப்பு அமைப்பை பயன்படுத்தி வருகிறது. இதில் ரேடார் மற்றும் தாமிர் இடைமறிப்பு ஏவுகணைகள் உள்ளன.
அவை இஸ்ரேல் மீது ஏவப்படும் ராக்கெட்டுகள் அல்லது ஏவுகணைகளைக் கண்காணித்து நடு வானில் தாக்கி அழிக்கும்.
இந்த நிலையில் இஸ்ரேல் மீதான தாக்குதல் அபாயம் அதிகரித்துள்ள நிலையில் அந்நாடு அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்பான அயன் பீம்மை பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
அயன் பீம், நூற்றுக்கணக்கான மீட்டர்கள் முதல் பல கிலோ மீட்டர்கள் வரை ஒளியின் வேகத்தில் ஈடுபட முடியும். உயர் சக்தி லேசரைப் பயன்படுத்தி ஏவுகணைகளை வீழ்த்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிறிய, இலகுவான மற்றும் ரேடாரில் இருந்து தப்பிக்கும் டிரோன்கள் உட்பட இலக்குகளை அயன் பீம் அழிக்கும். அயன் டோமும் கடினமாக உள்ள இலக்குகளையும் தாக்கும். இது விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது.