காஸாவில் இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதல் – அதிகரிக்கும் என அறிவித்த நெதன்யாகு
தெற்கு காஸா பகுதியில் உள்ள ரபா நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 18 குழந்தைகள் உட்பட 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்கா தனது நெருங்கிய கூட்டாளியான இஸ்ரேலுக்கு கூடுதல் உதவியாக பில்லியன் கணக்கான டொலர்களை அனுமதிக்கும் போது இந்த தாக்குதல் நடந்தது.
காசா பகுதியில் நடந்து வரும் மோதல்களால் 2.3 மில்லியன் மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தஞ்சம் புகுந்துள்ள ரபா மீது இஸ்ரேல் தினமும் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
எதிர்வரும் நாட்களில் ஹமாஸ் மீதான அரசியல் மற்றும் இராணுவ அழுத்தங்களை அதிகரிக்கப் போவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார்.
ஹமாஸ் மீதான மிகவும் வேதனையான தாக்குதலே அதன் பணயக்கைதிகளை மீண்டும் கொண்டு வந்து வெற்றியை அடைய ஒரே வழி என்று அவர் கூறினார்.
காசா பகுதியில் உள்ள உள்ளூர் சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் இதுவரை 34,000க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களில் மூன்றில் இரண்டு பங்கு குழந்தைகள் மற்றும் பெண்கள்.
ஹமாஸ் அழிக்கப்பட்டு, பணயக்கைதிகள் அனைவரும் திரும்பும் வரை போரை தொடரப்போவதாக நெதன்யாகு சபதம் செய்ததாக கூறப்படுகிறது.
காசா சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, போரில் குறைந்தது 34,097 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் மேலும் 76,980 பேர் காயமடைந்துள்ளனர்.