பிரான்ஸ் கடவுச்சீட்டை பயன்படுத்தி மலேசியாவுக்குள் நுழைந்த இஸ்ரேல் நாட்டவர்
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இஸ்ரேல் நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்ற கும்பல் தலைவர் ஒருவரை கைது செய்வதற்காக அவர் மலேசியாவுக்குள் நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கைது செய்யப்பட்ட இஸ்ரேலிய நாட்டவர் மீது இன்று குற்றம் சுமத்தப்படும் என்று அந்நாட்டுக் பொலிஸ் தலைமை ஆய்வாளர் ரஸாருதீன் உசேன் தெரிவித்துள்ளார்.
38 வயது ஷலோம் அவிட்டான் கைது செய்யப்பட்டபோது அவரிடம் இருந்த ஆறு துப்பாக்கிகள், 200க்கும் அதிகமான தோட்டாக்கள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அவிட்டான் இஸ்ரேலிய ஒற்றராக இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. போலி பிரெஞ்சுக் கடவுச்சீட்டை பயன்படுத்தி அவர் மலேசியாவுக்குள் நுழைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அவர் ஆயுதங்கள் வைத்திருந்ததற்கு வேறு காரணங்கள் உள்ளதா என கண்டறிய விசாரணை நடத்தப்படுவதாக ரஸாருதீன் கூறினார்.
அவரிடம் ஆயுதங்களை விற்றதாக மலேசியத் தம்பதியர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக இதுவரை மொத்தம் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.