காஸாவில் ஜபாலியா அகதி முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்; குறைந்தது 33 பேர் உயிரிழப்பு!
காஸாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க எட்டு அகதி முகாம்களில் ஆகப் பெரிதான ஜபாலியா அகதி முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 33 பேர் உயிரிழந்உள்ளனர்.தாக்குதல் காரணமாக 85 பேர் காயமடைந்ததுடன் அங்கிருந்த பல கட்டடங்கள் சேதமடைந்ததாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்தனர்.
இத்தாக்குதல் அக்டோபர் 18ஆம் திகதியன்று நடத்தப்பட்டது.
இடிபாடுகளுக்கு அடியில் பலர் சிக்கியிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.எனவே, மரண எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று பாலஸ்தீன அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, காஸாவின் வடக்குப் பகுதியில் உள்ள மூன்று மருத்துவமனைகளில் நோயாளிகள், காயமடைந்தோர் ஆகியோரின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருவதாக பாலஸ்தீன சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த மருத்துவமனைகளுக்கு உடனடியாக எரிபொருள், மருத்துவச் சாதனங்கள், உணவு ஆகியவை அனுப்பிவைக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஜபாலியா அகதி முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயம் அடைந்த பெரியவர்கள் கமால் அட்வான் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.அங்கு சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த சிறுவர்கள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
அகதி முகாமில் பதுங்கியிருந்த ஹமாஸ் போராளிகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.