காசா ஆக்கிரமிப்புக்கு முன்னதாக மோசமடைந்து வரும் இஸ்ரேலிய இராணுவத்தின் மனிதவள நெருக்கடி

காஸா நகரில் தனது ராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்த தயார்நிலையில் இருக்கும் ஆயிரக்கணக்கான வீரர்களை மீண்டும் சேவைக்குத் திரும்பும்படி அழைப்பதற்கான ஆயத்தப் பணிகளை இஸ்ரேல் செய்துவருகிறது.
ஆனால், ஈராண்டுகளாக நீடிக்கும் போரால் மனந்தளர்ந்து போயுள்ள வீரர்களில் எத்தனை பேர் மீண்டும் வருவர் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று இஸ்ரேலிய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராணுவச் சேவைக்குத் திரும்பாத இஸ்ரேலியத் தயார்நிலை வீரர்களில் எண்ணிக்கை கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது. ஒருசிலர் போரால் தளர்ந்துவிட்டதாகக் கூறினர். வேறு சிலர் வலுவிழந்த திருமண வாழ்க்கையையும் பணியையும் காப்பாற்றும் இக்கட்டிலும் சிக்கியிருப்பதாகத் தெரிவித்தனர். வேறு சிலர் எப்போது முடியும் என்று தெரியாமல் போர் செய்வதைச் சுட்டினர்.
வீரர்களின் அதிருப்தியான நிலை, காஸா நகரைக் கைப்பற்றும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவின் திட்டத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளது.
நெட்டன்யாகுவின் திட்டத்திற்காக இஸ்ரேலிய ராணுவம் கூடுதலாக தயார்நிலையில் இருக்கும் 60,000 வீரர்களைச் சேவைக்குத் திரும்பும்படி அழைக்கவும் ஏற்கெனவே சேவையில் உள்ள 20,000க்கும் அதிகமான வீரர்களின் சேவைக் காலத்தை நீட்டிக்கவும் திட்டமிடுகிறது.
காஸா வட்டாரத்தைத் தவிர இஸ்ரேல் வேறு சில போரையும் எதிர்கொள்கிறது. தெற்கு லெபனான், சிரியா ஆகியவற்றின் சில பகுதிகளையும் அவர்கள் கண்காணிக்கின்றனர்.
எத்தனை வீரர்கள் போரைவிட்டு பின்வாங்கியுள்ளனர் என்பதை இஸ்ரேலிய ராணுவம் குறிப்பிடவில்லை.
ஒருசில வீரர்கள் தொடர்ந்து போராட உற்சாகத்துடன் இருப்பதைக் குறிப்பிட்டனர். ஆனால், வேறுசில அதிகாரிகளும் தளர்ந்துபோன வீரர்களால் எண்ணிக்கை குறைந்ததைச் சுட்டினார்.