லெபனானில் ஹிஸ்புல்லா ராக்கெட் லாஞ்சர் இலக்குகளைத் தாக்கி அழித்த இஸ்ரேல் ராணுவம்
தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாக்களின் ராக்கெட் லாஞ்சர் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தி நூற்றுக்கணக்கான ராக்கெட் லாஞ்சர் பேரல்களை அழித்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை மதியம் இத்தாக்குதல் நடந்ததாகவும் உறுதிப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை (ஐடிஎஃப்) வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேலின் பாதுகாப்புக்காக ஹிஸ்புல்லா அமைப்பின் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை ஐடிஎஃப் தொடர்ந்து தாக்கி அழிக்கும்” என்று தெரிவித்திருந்தது. லெபனானில் பேஜர், வாக்கி-டாக்கிகளை வெடிக்கவைத்து நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்வினையாற்றிய ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லா, “இஸ்ரேல் அனைத்து நெறிகள், சட்டங்களுக்கு அப்பால் சென்று அரங்கேற்றியுள்ள போர்க் குற்றம் இது. எதையும் பொருட்படுத்தாமல் இதனை இஸ்ரேல் செய்துள்ளது. இதற்கு நியாயமான பழிவாங்கள் மற்றும் தண்டனை வழங்கப்படும்” என்று தெரிவித்ததைத் தொடந்து இத்தாகுதல் நடத்தப்பட்டது.
இதனிடையே மத்திய கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் பதற்றத்தைத் தொடர்ந்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஒரு ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தை வேண்டும் என்று வெள்ளை மாளிகை வியாழக்கிழமை அறிவுறுத்தியுள்ளது.
இந்த வாரத்தில் லெபனானில் தகவல் தொடர்பு சாதனங்களில் நடந்த வெடி விபத்துகளில், அந்த தொடர்பு சாதனங்கள் நாட்டுக்குள் வருவதற்கு முன்பே வெடிமருந்து பொருள்கள் வைக்கப்பட்டதாக இஸ்ரேல் அதிகாரிகள் தீர்மானித்திருப்பதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு லெபனானில் இருந்து அனுப்பப்பட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய ஆயிரக்கணக்கான பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறின. அடுத்த நாளே அவர்கள் பயன்படுத்திய வாக்கி-டாக்கிகள் வெடித்துச் சிதறின. இந்த ‘டிவைஸ் வெடிப்புத் தாக்குதல்’ சம்பவங்களில் இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர் ஏறத்தாழ 3,000 பேர் காயமடைந்தனர்.
இஸ்ரேல் நீண்ட காலமாக ஹிஸ்புல்லாவை அதன் எல்லைகளில் மிகப்பெரிய அச்சுறுத்தலாகக் கருதுகிறது. நாளுக்கு நாள் அது வளர்ந்து பயங்கர ஆயுதக் குழுவாக உருவாகி வருவது இஸ்ரேலுக்கு கவலையளிப்பதாக இருக்கிறது. மேலும், சிரியாவில் அது வலுவாக நிலைநிறுத்தப்பட்டுள்ளதை இஸ்ரேல் தனக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கருதுகிறது.