காசாவில் மனிதாபிமானப் பணிகள் முடங்கும் அபாயம்
காசாவில் இயங்கி வரும் 37 சர்வதேச மனிதாபிமான அமைப்புகள், அங்கு பணியாற்றும் பாலஸ்தீன ஊழியர்களின் முழு விபரங்களை வழங்கத் தவறியதால், அவை காசாவில் இயங்குவதற்கு இஸ்ரேல் தடை விதித்துள்ளது.
நாளை (ஜனவரி 1) முதல் அமலுக்கு வரும் இந்தத் தடையால், காசாவிற்குச் செல்லும் உணவு மற்றும் மருத்துவ விநியோகங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது.
ஹமாஸ் போன்ற அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் உதவி அமைப்புகளில் ஊடுருவுவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை என இஸ்ரேல் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இந்த முடிவை “மூர்க்கத்தனமானது” என வர்ணித்துள்ளன.
ஏற்கனவே கடும் குளிராலும், போரின் அழிவுகளாலும் பாதிக்கப்பட்டுள்ள 22 இலட்சம் மக்களுக்குக் கிடைக்கும் சொற்ப உதவிகளும் இத்தடையால் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, போரின் போது மருத்துவச் சேவைகளை வழங்கிய ‘டாக்டர் வித்தவுட் பார்டர்ஸ்’ (Doctors Without Borders) மற்றும் ‘ஆக்ஸ்பாம்’ (Oxfam) போன்ற முக்கிய அமைப்புகளும் இத்தடைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது





