வடக்கு காஸாவில் உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல்
காஸாவின் வடபகுதியில் உள்ள ‘பீட் லஹியா’ நகரின் ‘கமால் அட்வான்’ மருத்துவமனையில் இஸ்ரேலியப் படைகள் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளதாக பாலஸ்தீன சுகாதாரத் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 8) தெரிவித்துள்ளனர்.அதன் காரணமாக, மின்சாரமும் பிராணவாயு இயந்திரங்களும் சேதமுற்றன. உடனடி அறுவை சிகிச்சைகளுக்குப் பெரும் தடை ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனையின் இயக்குநர் ஹுசாம் அபு சஃபியா, கிட்டத்தட்ட 100 பீரங்கிக் குண்டுகளாலும் வெடிகுண்டுகளாலும் மருத்துவமனை தாக்கப்பட்டதாகக் கூறினார்.இந்தத் தாக்குதலில் மருத்துவ ஊழியர்களும் நோயாளிகளும் காயமடைந்தனர்.
“நிலைமை மிக ஆபத்தாக உள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகள் உள்ளனர். மற்ற நோயாளிகள் அறுவை சிகிச்சைக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றனர். மின்சாரமும் பிராணவாயு விநியோகமும் மீண்டும் சரிசெய்யப்பட்டால் மட்டுமே அறுவை சிகிச்சை அறைகளுக்குள் செல்லமுடியும்,” என்று அபு சஃபியா அறிக்கை ஒன்றில் கூறினார்.
மருத்துவமனை, காயமடைந்த 112 பேருக்கு சிகிச்சை வழங்குவதாகவும் அவர்களில் அறுவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாகவும் அவர் சொன்னார்.
அபு சஃபியாவின் கருத்துகள் குறித்து இஸ்ரேல் ராணுவம் உடனடிக் கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு ‘கமால் அட்வான்’ மருத்துவமனைக்கு அருகில் நடத்தப்பட்ட இஸ்ரேலிய ஆகாயத் தாக்குதலில், மருத்துவர் ஒருவரும் அவரது குடும்பத்தாரும் கொல்லப்பட்டதாக ஹமாஸ் கட்டுப்பாட்டில் இயங்கும் காஸாவின் சுகாதார அமைச்சு கூறியது.
இஸ்ரேலிய ராணுவம் வட காஸாவின் ‘ஜபாலியா’, ‘பீட் லஹியா’, ‘பீட் ஹனுன்’ பகுதிகளில் உள்ள வீடுகளை வெடிகுண்டு வைத்து தகர்த்ததாக குடியிருப்பாளர்கள் கூறினர். இஸ்ரேலியப் படைகள் கடந்த அக்டோபரிலிருந்து அங்குச் செயல்பட்டு வருகின்றன.