இலக்கை எட்டும் வரை போரைத் தொடர இஸ்ரேலுக்கு அனுமதி அளிக்க வேண்டும் ; பிரதமர் நெட்டன்யாகு
ஹமாஸ் அமைப்பை வேருடன் அழிக்க காஸா மீதான தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.தாக்குதல் காரணமாகப் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் உயிரிழந்துவிட்டனர்.
போர் நிறுத்தத்துக்கு உலக நாடுகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், இதுதொடர்பாக கத்தாரில் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
இந்நிலையில், தனது இலக்கு எட்டப்படும் வரை போரைத் தொடர, போர் நிறுத்த உடன்படிக்கை இஸ்ரேலுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு ஜூலை 7ஆம் திகதியன்று தெரிவித்தார்.ஹமாஸ் பிடித்து வைத்திருக்கும் இஸ்ரேலியப் பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
அத்துடன், காஸா-எகிப்து எல்லை வழியாக ஹமாஸ் அமைப்புக்காக ஆயுதம் கடத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும் எனப் பிரதமர் நெட்டன்யாகு வலியுறுத்தினார்.ஹமாஸ் அமைப்பு முழுமையாக அழிக்கப்படும்வரை போர் தொடரும் என்றார் அவர்.
கடந்த ஒன்பது மாதங்களாகத் தலைவிரித்தாடும் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா, திட்டப் பரிந்துரை ஒன்றை முன்வைத்துள்ளது.அந்தத் திட்டத்தின் முக்கிய அம்சத்தை ஹமாஸ் ஏற்றுக்கொண்டது.இனி இஸ்ரேலின் பதிலுக்காகக் காத்துக்கொண்டிருப்பதாக அது கூறியது.