இஸ்ரேல்-ஹெஸ்பொல்லா போர்: பிரதமர் நெதன்யாகுவின் வீட்டை தாக்கிய இரு ‘ஃபிளாஸ்’ குண்டுகள்
இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் உள்ள சிசேரியா நகரில் அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்குச் சொந்தமான வீட்டின் தோட்டத்துக்குள் இரண்டு ஃபிளாஷ் குண்டுகள் பாய்ச்சப்பட்டன.
சம்பவம் நிகழ்ந்தபோது நெதன்யாகுவும் அவரது குடும்பத்தினரும் அந்த வீட்டில் இல்லை என்று இஸ்ரேலியக் காவல்துறை தெரிவித்தது.
இந்தத் தாக்குதல் அனைத்து வரம்புகளையும் மீறிவிட்டதாக இஸ்ரேலியத் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் நவம்பர் மாதம் 17ஆம் திகதியன்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
“பிரதமர் நெதன்யாகுவைக் கொல்ல ஈரானும் அதன் ஆதரவுடன் செயல்பட்டு வரும் அமைப்புகளும் முயற்சி செய்து வருகின்றன. இந்நிலையில், இஸ்ரேலில் இருக்கும் அவரைக் கொல்ல மிரட்டல் விடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றார் அவர்.பிரதமர் நெட்டன்யாகுவுக்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்க அமைச்சர் கட்ஸ் இஸ்ரேலிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
பிரதமர் நெதன்யாகுவின் வீட்டுத் தோட்டத்துக்குள் ஃபிளாஷ் குண்டுகள் பாய்ச்சப்பட்டது குறித்து இஸ்ரேலிய அதிபர் ஐசாக் ஹெர்ஸோக் கண்டனம் தெரிவித்தார்.
கடந்த அக்டோபர் மாதம், பிரதமர் நெதன்யாகுவின் வீட்டை நோக்கி ஆளில்லா வானூர்தி ஒன்று அனுப்பிவைக்கப்பட்டது.ஆனால், அதனால் அவருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.