காஸாவில் தங்கள் ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வரும் இஸ்ரேல்
காஸாவில் இஸ்ரேல் தனது ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்திவரும் வேளையில் மக்கள் வெளியேற்றப்படுகின்றனர்.உதவிப் பொருள்களை வழங்கும் குழுக்கள், பங்காளி நாடுகள் ஆகியவை விடுத்த எச்சரிக்கைகளையும் தாண்டி இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துகிறது.
இஸ்ரேல்-ஹமாஸ் போரால் காஸாவில் நூறாயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேறவேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்களில் பலர் தஞ்சம் புகுந்துகொள்ள ராஃபாதான் எஞ்சியிருந்தது. ஆனால் இப்போது அங்கிருந்தும் வெளியேறவேண்டிய சூழல் நிலவுகிறது.
சனிக்கிழமை (மே 11) மாலை வட காஸாவின் சில பகுதிகளில் பீரங்கித் தாக்குதல்கள் இடம்பெற்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் பஞ்சம் முழுவீச்சில் நிலவுவதாக உலக உணவுத் திட்டம் குறிப்பிட்டது.
ஜபால்யாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை மேற்கொண்டதாக அப்பகுதிவாசிகள் தெரிவித்தனர்.
வீடுகளிலிருந்து வெளியேறிய பொதுமக்களை கான் யூனிஸ் புறநகர்ப் பகுதியில் இருக்கும் மவாசி எனும் சிற்றூருக்கு இடம் மாறிக்கொள்ளுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. ஆனால், திரளாக வரும் மக்களைக் கையாள அப்பகுதியில் போதுமான வசதி கிடையாது என்று நிவாரண அமைப்புகள் சொல்கின்றன.அதேவேளை, எஞ்சியிருக்கும் ஹமாஸ் படையினரை ஒழிக்க ராஃபாவில் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் தாங்கள் இருப்பதாக இஸ்ரேல் எடுத்துரைத்துவருகிறது.
சுமார் 300,000 காஸா மக்கள் மவாசியை நோக்கிச் சென்றதாக சனிக்கிழமையன்று இஸ்ரேலியப் படைகள் தெரிவித்தன.மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் மீண்டும் உத்தரவிட்டிருப்பது அனைத்துலக அளவில் கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.