ஹிஸ்புல்லாவின் அடுத்த தலைவராக கருதப்படும் சஃபிதீன் கொல்லப்பட்டதை உறுதி செய்த இஸ்ரேல்
இஸ்ரேலியத் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசான் நஸ்ரல்லா கொல்லப்பட்டதை அடுத்து, அவரின் மகன் என்று கூறப்படும் ஹஷிம் சைஃபிதீன் கொல்லப்பட்டுவிட்டதாக இஸ்ரேல் அக்டோபர் 22ஆம் திகதி உறுதிப்படுத்தியது.
பெய்ரூட்டின் தென்புறநகர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலின்போது சைஃபிதீன் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. சைஃபிதீனின் மரணத்தை உறுதிப்படுத்துவது இதுவே முதன்முறை.
ஹஷிம் சைஃபிதீன் அநேகமாகக் கொல்லப்பட்டிருப்பார் என்று அக்டோபர் முற்பாதியில் இஸ்ரேல் குறிப்பிட்டிருந்தது.இதற்கிடையே, சைஃபிதீன் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் விடுத்த அறிக்கை தொடர்பில் ஹிஸ்புல்லா உடனடி பதிலேதும் தெரிவிக்கவில்லை.
மத்தியக் கிழக்கு வட்டாரத்தில் ஈரானைப் பிரதிநிதிக்கும் படைகளில் ஆக சக்திவாய்ந்த ராணுவ அமைப்பாக ஹிஸ்புல்லா கருதப்படுகிறது. அது இவ்வாறு உருவெடுக்க முக்கியப் பங்கு வகித்தவர் நஸ்ரல்லா.நஸ்ரல்லாவின் மகன் என்று கூறப்படும் சைஃபிதீன், ஹிஸ்புல்லா அமைப்பின் ராணுவச் செயல்பாடுகளுக்குப் பொறுப்பான பிரிவிலும் ஹிஸ்புல்லாவின் நிதி, நிர்வாக விவகாரங்களைக் கையாளும் அதன் நிர்வாக மன்றத்திலும் நியமிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பாதுகாப்பு காரணம் கருதி இறுதிச் சடங்குகளுக்கும் மற்ற நிகழ்வுகளுக்கும் நஸ்ரல்லா செல்ல முடியாத நிலையில், கடந்த ஓராண்டாக ஹிஸ்புல்லாவுக்குக் குரல்கொடுத்துவரும் முக்கியப் பொறுப்பை சைஃபிதீன் ஏற்றிருந்தார்.
ஹமாஸ், ஹிஸ்புல்லா தலைவர்கள் பலரும் கொல்லப்பட்ட நிலையிலும் காஸா, லெபனான் மீதான அதன் தாக்குதல்களை இஸ்ரேல் கைவிடுவதாகத் தெரியவில்லை. செப்டம்பர் 27ஆம் திகதி நடந்த வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அதன் தலைமைச் செயலாளரான நஸ்ரல்லாவை இழந்தது.
இதற்கிடையே, நவம்பர் 5ஆம் திகதி அமெரிக்க அதிபர் தேர்தலில் புதிய அமெரிக்க நிர்வாகம் முடிவாவதற்கு முன், இஸ்ரேல் அதன் நிலையை மேலும் உறுதிப்படுத்திக்கொள்வதை நோக்கிச் செயல்படுவதாக அரசதந்திரிகள் கூறுகின்றனர்.