நேபாளத்தில் கைதான இஷாரா செவ்வந்தி – இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை
கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி உட்பட கைது செய்யப்பட்ட 6 சந்தேகநபர்களும் இன்று இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 6 சந்தேக நபர்கள் நேபாளத்தில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.
குறித்த ஆறு பேரும் நேபாளத்தில் மூன்று இடங்களில் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேபாள அரசாங்கத்தின் உதவியுடன் பெறப்பட்ட கணினி தரவு பகுப்பாய்வு மற்றும் களத்தில் உள்ள உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் அவரது இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டது.
நேபாள பொலிஸ் பிரிவின் தலைமையில் இலங்கை குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் புலனாய்வுப் பிரிவுகளால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
ஒரு சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது, நேபாளத்தின் காத்மண்டுவிலிருந்து சுமார் 19 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்தபோது இஷாரா செவ்வந்தி பிடிபட்டதாக புலனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தொலைபேசி அழைப்பின் மூலம் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த செவ்வந்தி, சூசகமான முறையில் வெளியில் அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்ட நேரத்தில், அவரை நாடுகடத்த உதவிய ஜே.கே. பாய் என்ற நபரும் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.





