இலங்கையில் நிபா வைரஸ் பரவும் அபாயம் அதிகம் ? – சுகாதார அமைச்சின் விசேட அறிவிப்பு
இலங்கைக்குள் நிபா வைரஸ் பரவும் அபாயம் தற்போது மிகக் குறைந்த மட்டத்திலேயே காணப்படுவதாகச் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
நிபா வைரஸ் தொடர்பில் தெளிவுபடுத்தி ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைக் காலத்தில் இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் நிபா வைரஸ் தொற்றுடைய சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், அந்த நிலைமையைக் கருத்திற்கொண்டு உலக சுகாதார ஸ்தாபனம் சர்வதேச பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கப் பரிந்துரைக்கவில்லை எனவும் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிபா வைரஸ் பிரதானமாக விலங்குகளுக்கு இடையில், குறிப்பாக வௌவால்களுக்கு இடையில் காணப்படும் ஒரு தொற்று நோயாகும்.
தொற்றுக்குள்ளான விலங்குகள் அல்லது பொருட்களுடன் நெருங்கிய தொடர்பு ஏற்படும் போது மிக அரிதாகவே மனிதர்களுக்குப் பரவக்கூடும் எனவும் அதில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மனிதர்களுக்கு இடையில் தொற்று பரவுவது நெருங்கிய மற்றும் நீண்டகால தொடர்புகள் ஊடாக மாத்திரமே இடம்பெறுவதாகவும், இந்த வைரஸ் இன்ஃபுளுவென்சா போன்று காற்றின் மூலம் இலகுவாகப் பரவும் வைரஸ் அல்ல எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நோயாளர்களை விரைவாக அடையாளம் காண்பதற்காகப் பலமான நோய் கண்காணிப்பு முறைமை இலங்கையில் செயற்படுவதாகவும், ஏதேனும் நோய் நிலைமை அடையாளம் காணப்பட்டால் உடனடியாகப் பதிலளிக்கச் சுகாதார அமைச்சு முழுமையாகத் தயாராக உள்ளதாகவும் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்காக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திடம் நோயைக் கண்டறிவதற்கு தேவையான ஆய்வுகூட வசதிகளும் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
சுகாதார அமைச்சு உலக சுகாதார ஸ்தாபனம் உள்ளிட்ட உரிய சர்வதேச நிறுவனங்களுடன் நெருங்கிய ஒத்துழைப்புடன் செயற்பட்டுப் பிராந்திய நோய் நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும், சரியான தகவல்களுக்கு உத்தியோகபூர்வ அறிவிப்புகள் மற்றும் நம்பகமான மூலங்களை மாத்திரம் பயன்படுத்துமாறும் பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.





