வெனிசுலா மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நியாயமானதா?
வெனிசுலா மீது அமெரிக்கா முன்னெடுத்துள்ள தாக்குதல் நடவடிக்கை உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டின் ஜனாதிபதியான நிக்கலோஸ் மதுரோ அமெரிக்க படையினரால் சிறைப் பிடிக்கப்பட்டு தற்போது குற்றவியல் விசாரணைகளை எதிர்கொண்டுள்ளார்.
இந்நிலையில் உலக நாடுகள் பல அமெரிக்காவின் தாக்குதலை விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக அமெரிக்காவின் இந்த தன்னிச்சையான நடவடிக்கையை நியாயப்படுத்த முடியாது என்றும், இது தொடர்ந்தால் எந்த நாடும் விருப்பப்படி மற்றொரு நாடு மீது படையெடுக்கலாம்,” என்ற நிலை உருவாகும் எனவும் உலக தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
உலக தலைவர்களின் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்கா 1823 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மன்ரோ கோட்பாட்டின் அடிப்படையில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மன்ரோ கோட்பாடானது, ஐரோப்பிய சக்திகள் மேற்கு அரைக்கோளத்தில் தலையிடக்கூடாது என்றும், அமெரிக்கா ஐரோப்பிய விவகாரங்களில் தலையிடாது என்று கூறும் வெளியுறவுக் கொள்கையாகும். இந்த கோட்பாடானது ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் தனித்தனி செல்வாக்கு மண்டலங்களை நிறுவியது.
இதன் அடிப்படையில் மேற்கு அரைக்கோளத்தில் இருக்கும் நாடுகள் மீது அமெரிக்கா தாக்குதல் அல்லது ஆக்கிரமிப்பு நடவடிக்கையை முன்னெடுத்தால் அதனை ஏனைய நாடுகள் எதிர்க்க முடியாது.
அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களில் வெளிநாட்டு சக்திகள் தலையிடுவது அமெரிக்காவிற்கு எதிரான ஒரு விரோதச் செயலாகும் என்று இந்த கோட்பாடு கூறுகிறது. இதனை முன்வைத்து அமெரிக்காவின் நடவடிக்கையை ட்ரம்ப் நியாயப்படுத்தியுள்ளார்.

இதற்கிடையே வெனிசுலாவில் பாதுகாப்பான, சரியான மற்றும் நியாயமான ஆட்சி அமைக்கப்படும்வரை அமெரிக்கா நாட்டை வழிநடத்தும் என்றும் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ட்ரம்பின் இந்த அறிவிப்பானது வெனிசுலாவில் அமெரிக்கா ஒரு நிழல் அரசாங்கத்தை அமைத்துள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
அந்நாட்டில் துணை ஜனாதிபதிபதியாக பதவி வகித்த டெல்சி ரோட்ரிக்ஸ் (Delcy Rodríguez) ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அமைய இந்த ஆட்சி மாற்றம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. இதற்கு பின்னால் அமெரிக்கா உள்ளதா என்ற சந்தேகமும் எழுகிறது.
ஒட்டுமொத்தமாக பார்க்கும்பொழுது அமெரிக்காவின் ஆட்சியின் கீழேயே வெனிசுலாவின் அரசியல் நகர்வுகள் முன்னெடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. வெனிசுலாவில் இருந்து ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு எண்ணெய் விநியோகம் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில், ரஷ்யாவின் பொருளாதாரமும் அடிப்படலாம் எனக் கூறப்படுகிறது.
ஆக வெனிசுலாவின் எண்ணெய் உள்ளிட்ட கனிய வளங்களை அமெரிக்கா தன்வசம் ஆக்கிக்கொள்ளலாம். இவ்வாறான ஒரு சூழ்நிலையில் அமெரிக்கா ஐ.நா கவுன்சிலின் கோட்பாட்டை மீறுவதாக பிற நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன. ஈரான், சீனா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் ஐ.நாவின் முடிவை வலியுறுத்தியுள்ளன. நாளைய தினம் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஒன்றுக்கூடி இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




