‘சிறைச்சாலை சாம்ராஜ்யம்’ தொடர்பில் சட்டமா அதிபருக்கு இப்போதுதான் தெரியுமா? சுதேஷ் நந்திமால்

இலங்கையில் கைதிகள் மற்றும் விடுதலையானவர்கள் இருவரையும் குறிவைத்து நடக்கும் பல அட்டூழியங்களுக்குப் பின்னால் சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவு உள்ளதாக கைதிகளின் உரிமைகளுக்காக செயற்படும் அமைப்பின் முன்னணி ஆர்வலர் குற்றம் சாட்டியுள்ளார்.
சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவை ‘கைதிகளை நசுக்குவதற்குப் பொறுப்பான ஒரு பிரிவு’ என அழைக்கும் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுதேஷ் நந்திமால், அந்தப் பிரிவால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் அரச அதிகாரிகளால் அங்கீகரிக்கப்படுவது, அந்த நிலைமையின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்துள்ளதாக குறிப்பிடுகின்றார்.
சித்திரவதை, கடத்தல் மற்றும் கொலைகள்
“சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவு இயங்கினால், அது கைதிகளுக்கு பாதுகாப்பை வழங்கும் வகையில் இருக்க வேண்டுமேத் தவிர கைதிகளை நசுக்கவோ அல்லது சித்திரவதை செய்யும் நோக்கிலோ அல்ல”, எனக் குறிப்பிடும் சுதேஷ் நந்திமால் உண்மையில் இதற்கு நேர்மாறாக இடம்பெறுவதாக சுட்டிக்காட்டுகிறார்.
“இலங்கை சிறைகளுக்குள் ஒவ்வொரு நாளும் எத்தனை சித்திரவதைகள் செய்யப்படுகின்றன? கைதிகளைத் தாக்குவது மிகவும் பொதுவானதாகவும் சாதாரணமாகவும் மாறிவிட்டது. சிறை நிர்வாகம் அத்தகைய சித்திரவதைகள் அனைத்தையும் மூடிமறைப்பதோடு, இந்தக் குற்றங்களை நியாயப்படுத்துகிறது.”
நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்படும் கைதிகளை மாத்திரமல்ல, தண்டனை காலம் முடிந்து விடுவிக்கப்படுபவர்களையும் குறிவைத்து, புலனாய்வுப் பிரிவு பல்வேறு சித்திரவதை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவின் ஒருங்கிணைப்பாளர் குற்றம் சாட்டுகிறார்.
தனி சாம்ராஜ்யத்தில் சித்திரவதை கலாச்சாரம்
“சில கைதிகள் விடுவிக்கப்படும்போது சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவு அவர்களைப் பின்தொடர்கிறது என்பதில் எங்களுக்கு கடுமையான சந்தேகங்கள் உள்ளன. புலனாய்வுப் பிரிவு மூலம் கடத்தல்கள் மற்றும் சில கொலைகள் நடைபெறுகின்றன என்பதில் எங்களுக்கு நியாயமான சந்தேகங்களும் உள்ளன. சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட சில கைதிகள் காணாமல் போன வழக்குகளும் உள்ளன. அந்த காணாமல் போன சம்பவங்களில் புலனாய்வுப் பிரிவு ஈடுபட்டுள்ளது என்பதை நிராகரிக்க முடியாது,” என சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவை கடுமையாகக் குற்றம் சாட்டிய சுதேஷ் நந்திமால், சிறைச்சாலைகளைச் சுற்றி ஒரு தனி சாம்ராஜ்யம் இருப்பதாக சட்டமா அதிபர் திணைக்களம் அலுவலகம் தற்போது கூறுவது ஒரு புதிய கண்டுபிடிப்பாக இருக்கலாம் எனவும், ஆனால் சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு அது பொருந்தாது எனவும் வலியுறுத்துகின்றார்.
ஜனாதிபதி மன்னிப்பை பயன்படுத்தி கைதிகளை மோசடியாக விடுவித்த குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்ற விசாரணையின் போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், சிறைச்சாலையின் உயர் அதிகாரிகளை “சிறைச்சாலைப் பேரரசின் மன்னர்கள்” என அழைத்தார்.
இலங்கை சிறைச்சாலை அமைப்பு, அதன் நிர்வாகம் மற்றும் அனைத்து நடவடிக்கைகளும் கைதிகளை துஷ்பிரயோகம், சித்திரவதை மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு ஆளாக்கும் வகையில் மூலோபாய ரீதியாகவும் கட்டமைப்பு ரீதியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக சுதேஷ் நந்திமால் சுட்டிக்காட்டுகிறார்.