அமைச்சரவை மாற்றத்துக்கு தயாராகும் அநுர அரசு?
அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறவுள்ளது என வெளியாகும் தகவலில் எவ்வித உண்மையும் இல்லை – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
“ கல்வி அமைச்சு பதவியில் மாற்றம் வராது. பிரதமர் பதவியிலும் ஹரிணியே தொடர்வார். அமைச்சரவை மறுசீரமைப்பு கதையெல்லாம் கட்டுக்கதை ஆகும்.” – எனவும் அவர் கூறினார்.
அதேவேளை, கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் அரசாங்கம் எடுத்த முடிவில் விமல்வீரவன்சவின் சத்தியாக்கிரகப் போராட்டம் எவ்விதத்திலும் தாக்கம் செலுத்தவில்லை.
கல்வி மறுசீரமைப்பு கைவிடப்பட வேண்டும், கல்வி அமைச்சர் பதவியில் இருந்து பிரதமர் பதவி விலக வேண்டும் என்பதே அவரின் கோரிக்கையாக உள்ளது.
எனவே, அவை நிறைவேற்றப்படவில்லை. எனவே, அவரின் போராட்டம் தொடரட்டும்.” எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.
தனது போராட்டம் வெற்றியளித்துவிட்டதாகக் கூறி சத்தியாகிரகப் போராட்டத்தை விமல்வீரவன்ச நேற்று நிறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.





