விரதம் இருப்பது நல்லதா – கெட்டதா? அறிந்திருக்க வேண்டியவை
விரதம் இருப்பது உடலுக்கு நல்லதா அல்லது கெட்டதா என்று எல்லோருடைய மனதில் கேள்வி எழுவதுண்டு. அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது கூட உடலுக்கு கெடுதலும், சில பக்க விளைவுகளும் ஏற்படும்.
மாதத்தில் ஒரு நாள் 24 மணி நேரமும் (1-2) முறை விரதம் அல்லது நீர் விரதம் அனுசரிப்பது, பல வகையில் உடலுக்கு நன்மை தருகிறது. எந்த ஒரு காரியத்தை செய்தாலும், காரணம் அறிந்து, அதை செய்யவேண்டிய சரியான முறையில் செய்தால், அதன் முடிவில் நிச்சயம் நல்ல தீர்வு மற்றும் பலன் கிடைக்கும்.
8 மணி நேரத்தில் சாப்பிட்டுவிட்டு,16 மணி நேரம் உண்ணாவிரதம் இருப்பது சால சிறந்தது. இந்த மாதிரியான இடைநிலை உண்ணாவிரதம் மூலம், உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். அதில் முதலாவது உடல் எடை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு நிச்சயம், இடைநிலை உண்ணாவிரதம் எடுப்பதன் மூலம் நல்ல மாற்றம் தெரியவரும். உடற்பயிற்சி செய்பவர்களுக்கு உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து, உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுகிறது.
விரதத்தின் நன்மைகள்: விரதம் இதயத்திற்கு மிகவும் நல்லது. இடைநிலை உண்ணாவிரதம் எடுப்பதால், இதயத்திற்கு நல்ல கொழுப்பை அதிகரிக்கவும், கெட்ட கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது. இதனால் இதய சம்பந்தமான பிரச்சனைகளும், மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை குறைப்பதாக சில ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மூளையின் செயல்திறன் அதிகரிக்கவும், ஞாபகமறதி குறைக்கவும், வயதானவர்களுக்கு அல்சீமர் நோய் (Alzheimer’s disease) வராமல் தடுக்க உதவுகிறது. ஒரு சிலருக்கு அடிக்கடி பசி எடுக்கும் உணர்வை குறைத்து, தேவையில்லாமல் ஆகாரம் உட்கொள்வதை தடுத்து, உடல் பருமன் ஆகாமல் குறைக்க உதவுகிறது.
நீர் விரதம்: ஒரு நாள் முழுவதும் உணவின்றி, நீர் ஆகாரம், ஜூஸ் ஆகியவை குடிக்காமல், தண்ணீர் மட்டும் குடிப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும். விரதம், மாதம் 1 முறை கடைபிடிக்கலாம், அதற்கு மேல் எடுத்தால் சில பக்க விளைவுகளும் ஏற்படும். நீர் மட்டும் குடிப்பதால், உடலில் சரியாக வேலை செய்யாத செல்கள், பழுதடைந்த செல்கள், இறந்த செல்கள் மீண்டும் செயல்பட ஆரம்பித்து, புதிய செல்கள் உருவாகும். இதயம், கல்லீரல், போன்ற உள்ளுறுப்புகள் சீராக செயல்பட இந்த செல்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. நீர் விரதம், 12-25% இரத்த சக்கரை அளவை சமமாக வைத்திருக்க உதவும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், புகை பிடித்தல், மது குடிப்பது, உள்ளுறுப்புகளுக்கு வீக்கத்தை குறைக்க நீர் விரதம் 30-40% வரை அபாயத்தை குறைக்க உதவுகின்றது. நீர் விரதம் முடிக்கும்போது, பழங்கள் அல்லது ஜூஸ் குடிக்கலாம், அதன்பிறகு குறைந்தது 5 மணி நேர இடைவெளியில், நல்ல திட உணவை உட்கொள்ளலாம்.
விரதம் உடலுக்கு பல நன்மைகள் தந்தாலும், யாரெல்லாம் விரதம் இருக்க கூடாது என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் 15 வயதுக்குட்பட்டவர்களும், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், யாரேனும் மருத்துவ சிகிச்சையில் இருந்தால், பித்தப்பை பிரச்சனை உள்ளவர்கள், தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் தவிர்க்கவேண்டும்.
நன்றி – கல்கி