தோல்விக்கு பாபர் அசாம் தான் காரணமா? பாகிஸ்தான் கேப்டனின் தகவலால் சர்ச்சை

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் நேற்று நடந்த முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியும் நியூசிலாந்து அணியும் கராச்சி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அனி அதிரடியாக விளையாடியது. 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 320 ரன்கள் எடுத்தது.
அடுத்ததாக பாகிஸ்தான் அணி 321 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. இதில் ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. சவுத் ஷகீல் 6 ரன்னிலும், கேப்டன் முகமது ரிஸ்வான் 3 ரன்னிலும் விக்கெட் இழந்த காரணத்தால் பாகிஸ்தான் அணி தடுமாறியது. இறுதியாக 47.2 ஓவரில் பாகிஸ்தான் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 260 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 60 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வீழ்த்தி புள்ளிபட்டியலில் முதலிடத்திற்கு சென்றது.
இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பாபர் மெதுவாக விளையாடியது தான் காரணம் என விமர்சனங்கள் எழுந்துள்ளது. ஏனென்றால், 81 பந்துகளில் அரைசதம் அடித்த அவர், 90 பந்துகளில் 64 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் பாகிஸ்தான் அணியின் ரன் வீதம் குறைந்து போனது. மிடில் ஆர்டரில் சல்மான் ஆகா (28 பந்து – 42 ரன்) மற்றும் குஷ்தில் ஷா (49 பந்து – 69 ரன்) அதிரடி காட்டினாலும் அணியை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்ல முடியவில்லை.
எனவே, பாபர் அசாம் மெதுவாக விளையாடியது தான் தோல்விக்கு காரணம் என பலரும் பேசி வரும் சூழல், அணியின் கேப்டனும் பாபரின் நெருங்கிய தோழருமான முகமது ரிஸ்வான் மறைமுகமாக அவர் மீது இந்த தோல்விக்கு அவர் தான் காரணம் என குற்றம் சாட்டி பேசியதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.
போட்டி முடிந்த பிறகு பேசிய பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் “இந்த போட்டியில் நியூசிலாந்து அணி நாங்கள் எதிர்பார்த்ததை விட எங்களுக்கு அதிகமான இலக்கு வைத்தது. 260 ரன்கள் அளவுதான் இருக்குமென நினைத்தோம். ஆனால் அவர்களின் யங் மற்றும் லேதம் ஜோடி சிறப்பாக விளையாடியது. நாம் லாகூரில் செய்த தவறையே மீண்டும் செய்துவிட்டோம்.
ஒரு நேரத்தில் நாங்கள் ஆட்டத்தின் கட்டுப்பாட்டில் இருந்தோம், ஆனால் இறுதிப் பகுதியில் பந்துவீச்சிலும், பவர்ப்ளேயில் பேட்டிங்கிலும் நாங்கள் பாதிக்கபட்டோம். பவர்ப்ளேயில் கொஞ்சம் வேகமாக விளையாடி ரன்களை குவித்து இருக்கலாம்” எனவும் முகமது ரிஸ்வான் கூறியுள்ளார். இந்த போட்டியில் பவர்ப்ளேயில் பாபர் அசாம் நிதானமாக தான் விளையாடி வந்தார். எனவே, ஒரு வேலை அவர் அவருடைய விளையாட்டை தான் குறையாக கூறுகிறாரோ என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.