ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை சாத்தியமா?
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எதிராக குற்றப் பிரேரணையை முன்வைப்பதற்குரிய நடவடிக்கையை முன்னெடுக்குமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியிடம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
மொட்டு கட்சி தலைமையகத்தில் கடந்த 11 ஆம் திகதி நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே கட்சி செயலாளர் சாகர காரியவசம் இந்த விடயத்தைக் குறிப்பிட்டிருந்தார்.
தாங்கள் எதை கூறினாலும் மக்கள் நம்பக்கூடும் என்ற நோக்கிலேயே தற்போது எதிரணி எனக் கூறிக்கொள்ளும் தரப்பு கருத்துகளை வெளியிட்டுவருகின்றது.
இதனை உறுதிப்படுத்துகின்றது சட்டத்தரணி சாகர காரியவசத்தின் கூற்று.
1978 இல்தான் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை உள்ளடக்கிய அரசமைப்பு உருவாக்கப்பட்டது. இன்றளவிலும் அந்த அரசமைப்பே அமுலில் உள்ளது.
இதுவரை 22 தடவைகள் அரசமைப்பு மறுசீரமைக்கப்பட்டிருந்தாலும் குற்றப் பிரேரணையை முன்வைப்பதற்கான நடைமுறையில் மாற்றம் வரவில்லை.
அந்தவகையில் –
✍️1. உளரீதியான பாதிப்பு அல்லது உடல் அங்கவீனத்தால் ஜனாதிபதி பதவியை தொடர்ந்து முன்னெடுக்க முடியாமல் இருந்தால் –
✍️2. அரசமைப்பை வேண்டுமென்றே மீறியிருந்தால்
✍️3. தேசத்துரோக செயலில் ஈடுபட்டிருந்தால் –
✍️4. இலஞ்சம் வாங்கியிருந்தால் –
✍️5. அதிகார துஷ்பிரயோகம் – துர்நடத்தை – ஊழலில் ஈடுபட்டிருந்தால் –
✍️6. சட்டத்தைமீறி ஒழுக்கமற்ற விதத்தில் நடந்திருந்தால் –
✍️👉மேற்படி காரணிகளில் ஏதேனும் ஒரு விடயத்தை அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட காரணிகளை முன்வைத்து, அது அல்லது அவை தொடர்பில் உயர்நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டுமெனகோரி, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் குற்றப் பிரேரணையை சபாநாயகரிடம் கையளிக்க முடியும்.
எனவே, டித்வா புயல் தொடர்பில் வளிமண்டளவியல் திணைக்களம் முன்கூட்டியே எச்சரித்ததாகவும், எனவே, பேரிடரால் ஏற்படும் இழப்பை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மொட்டு கட்சி கூறிவருகின்றது.
அதாவது இந்த விடயத்தை அக்கட்சி தேச துரோக நடவடிக்கையாக கருதுகின்றது போலும்.
சரி குற்றச்சாட்டு இருந்தாலும் குற்றப் பிரேரணையை முன்வைப்பதற்கு 150 எம்.பிக்களின் கையொப்பம் அவசியம்.
ஒட்டுமொத்த எதிரணி வசம் 66 எம்.பிக்களே உள்ளனர். எனவே, குற்றப் பிரேரணைiயை கொண்டுவருவதற்குரிய ஆரம்பக்கட்ட வாய்ப்புகூட எதிரணிக்கு இல்லை.
அப்படி இருக்கும்போது சட்டத்தரணியான சாகர காரியவசம் எந்த அடிப்படையில் குற்றப் பிரேரணை பற்றி கதைக்கின்றார்?
இவ்வாறு குற்றப் பிரேரணை கொண்டுவந்தால் மனசாட்சி உள்ள தேசிய மக்கள் சக்தி எம்.பிக்கள் ஆதரவளிப்பார்கள் எனக் கருதுகின்றார்.
அதாவது வாக்களிப்பு நடக்கும் நிலை பற்றி அவர் கதைக்கின்றார். அந்த கட்டத்துக்கு செல்வதற்கு முதலில் குற்றப் பிரேரணை வரவேண்டும். அதனை சபாநாயகர் ஏற்க வேண்டும். அதற்குரிய ஆரம்பக்கட்ட ஏற்பாடுகள்கூட இல்லை.
இலங்கை வங்குரோத்தடைந்தவேளை கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டுவருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி முற்பட்டாலும் – எதிரணி வசம் ஆதரவு இருந்தும் இது விடயத்தில் பின்வாங்கியது.
ஏனெனில் அதனை நிறைவேற்றுவதற்குரிய நடைமுறை கடினமானது என்பது தெரியும்.
இலங்கை அரசியல் வரலாற்றில் ரணசிங்க பிரேமதாசவுக்கு எதிராக மாத்திரமே 1991 இல் குற்றப் பிரேரணை கொண்டுவரப்பட்டது. எனினும், அது சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டது.
தற்போதைய நிலையில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை அமைத்து, என்ன நடந்தது, எங்கு தவறு இழைக்கப்பட்டுள்ளது என்பது பற்றி ஆராய்வதற்குரிய அழுத்தத்தையே பிரதான எதிரணி பிரயோகிக்க வேண்டும். அதனை சஜித் தரப்பு செய்து வருகின்றது.
இந்நிலையில் நாமல்தான் எதிர்க்கட்சி தலைவருக்குரிய பணியை செய்துவருகின்றார் எனக் கருதும் மொட்டு கட்சி, சஜித் தரப்பையும் சர்ச்சையில் சிக்க வைக்கும் வகையில் அறிவிப்புகளை வெளியிட்டுவருகின்றது.
ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை என்பது செய்தி….. ஆனால் அது சாத்தியப்படுமா என்பது பற்றி ஆராய வேண்டும். ஆரம்பக்கட்ட தகுதிகூட இல்லாத நிலையில், அது பற்றி ஏன் மொட்டு கட்சி கதைக்க வேண்டும்? இதற்கு பேர்தான் அனர்த்த அரசியல்?





