ஈரானின் பொருளாதாரத்தை மாற்றியமைப்பதாக ஜனாதிபதி பெஷேஷ்கியன் உறுதி
ஈரானில் கடந்த இரண்டு வாரங்களாக தொடரும் வன்முறை போராட்டங்களுக்குப் பிறகு, நாட்டின் போராடும் பொருளாதாரத்தை மாற்றியமைப்பதாக ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் உறுதியளித்துள்ளார்.
அரசு மக்களின் கருத்துகளை கேட்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை அரசு தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில், பெஷேஷ்கியன் சமரசமான அணுகுமுறையை வெளிப்படுத்தினார்.
அதே நேரத்தில், அமெரிக்காவும் இஸ்ரேலும் நாட்டில் நிலவும் அமைதியின்மையைத் தூண்டுவதாக அவர் குற்றம் சுமத்தினார்.
பொருளாதார சிக்கல்களைத் தீர்க்க தனது அரசு உறுதியாக செயல்படும் என்றும் கூறினார்.
டிசம்பர் மாத இறுதியில் ஈரானிய நாணயம் வீழ்ச்சி அடைந்ததைத் தொடர்ந்து, உயர்ந்த வாழ்க்கைச் செலவுகள் மற்றும் பணவீக்கம் காரணமாக மக்கள் வீதிகளில் இறங்கினர். தொடக்கத்தில் பொருளாதார கோரிக்கைகளுடன் தொடங்கிய போராட்டங்கள், பின்னர் அரசியல் எதிர்ப்பாக மாறியுள்ளன.
இந்த அமைதியின்மைக்கு வெளிநாட்டு சக்திகள் காரணம் எனக் கூறிய ஜனாதிபதி, “குழப்பம் மற்றும் சீர்குலைவை ஏற்படுத்தும் முயற்சிகள் நடக்கின்றன” என்று குற்றம் சுமத்தினார்.
கலவரம் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோரிடமிருந்து பொதுமக்கள் தங்களைத் தூர விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
2022–23 ஆம் ஆண்டுகளில், மஹ்சா அமினி காவலில் உயிரிழந்ததைத் தொடர்ந்து நடந்த போராட்டங்களுக்குப் பிறகு, தற்போது நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டங்கள் மிகப் பெரியதாகக் கருதப்படுகின்றன.
மக்களின் கவலைகளை அரசு கவனிக்க வேண்டும் என்றும், அவர்களுடன் உரையாடுவது அரசின் கடமை என்றும் பெஷேஷ்கியன் கூறினார்.
அதே நேரத்தில், சில குழுக்கள் சமூக அமைதியை சீர்குலைக்க அனுமதிக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.





