ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு வருகை: 05 புரித்துணர்வு ஒப்பந்தங்களை கைசாத்திடத் தீர்மானம்! வெளியான முழு விபரம்
இரு நாடுகளுக்கும் இடையில் 05 புரித்துணர்வு ஒப்பந்தங்களை கைசாத்திடத் தீர்மானம்.
தேசிய மின் கட்டமைப்பிற்கு 290 கிகாவோட் (290 GWh) மின் சக்தி.
4500 ஹெக்டயர் புதிய , 1500 ஹெக்டயர் பழைய விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதி.
பதுளை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை பிராந்தியங்களில் நீர் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான திட்டம்
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை மக்கள் பாவனைக்கான கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி நாளை (24) இலங்கைக்குக்கு வருகைத் தரவுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் விசேட அழைப்பின் பேரில், ஈரான் ஜனாதிபதி ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளதுடன், 2008 ஏப்ரல் மாத்தில் அப்போதைய ஈரான் ஜனாதிபதி மொஹமட் அஹமதிநெஜாட்டின் இலங்கை விஜயத்திற்கு பின்னர், ஈரான் ஜனாதிபதியொருவர் இலங்கைக்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும்.
ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் இதன்போது கைசாத்திடப்படவுள்ளது.
மகாவலி திட்டத்தின் பின்னர், நாட்டின் மிகப்பெரிய நீர்ப்பாசனத் திட்டமாக வரலாற்றில் இணையும் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் ஈரான் மற்றும் இலங்கை ஜனாதிபதிகளின் தலைமையில் நாளை (24) திறந்து வைக்கப்படவுள்ளது.
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் (UOMDP) என்பது இலங்கையின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாகும். தென்கிழக்கு பகுதியின் உலர் வலயத்தில் நிலவும் நீர்ப் பற்றாக்குறையைப் தனிப்பதற்காக, சுற்றுச் சூழலுக்கும், நீர் மூலங்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், உமா ஓயாவில் வருடாந்தம் சேரும் 145 (MCM) கனமீற்றர் நீருக்கு மேலதிகமான நீரை கிரிந்தி ஓயவிற்கு திருப்பிவிடுவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
இதன் மூலம் மொனராகலை மாவட்டத்தில் 4500 ஹெக்டயர் புதிய விவசாய நிலங்களுக்கும் தற்போதுள்ள 1500 ஹெக்டயர் விவசாய நிலங்களுக்கும் நீர்ப் பாசன வசதி கிடைக்கும். அத்தோடு பதுளை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை பிரதேசங்களின் குடிநீர் மற்றும் தொழிற்சாலை நீர் தேவைகளுக்கு 39 மில்லியன் கன மீற்றர் (MCM)நீரையும் வழங்க முடியும். இதனால் வருடாந்தம் 290 ஜிகாவாட் (290 GWh) மின்சாரத்தை தேசிய மின்சாரக் கட்டமைப்பிற்கு வழங்க முடியும்.
இத்திட்டத்தில், புஹுல்பொல மற்றும் டயரபா உள்ளிட்ட இரு நீர்த்தேக்கங்களை இணைக்கும் 3.98 கி.மீ நீளமான நீர்ச் சுரங்கம் (இணைப்பு சுரங்கப்பாதை), 15.2 கி.மீ நீளமான நீரோட்ட சுரங்கப்பாதை, நிலக்கீழ் மின் நிலையம், சுவிட்ச் யார்ட், பயணப் பாதை மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய கட்டுமானங்களும் உள்ளடங்கியுள்ளன.
இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அப்போதைய கனிய வள அபிவிருத்தி அமைச்சு மற்றும் ஈரான் குடியரசின் வலுசக்தி அமைச்சுக்கிடையில் 2007 நவம்பர் 27 ஆம் திகதி கைசாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்திற்கு அமைவாக உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை செயற்படுத்த ஈரானின் (FARAB) வலுசக்தி மற்றும் நீர்த்திட்ட நிறுவனம் (FC),இலங்கை அரசாங்கம் சார்பில் அப்போதைய நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சுக்கும் இடையில் 2008 ஏப்ரல் 28 ஆம் திகதி பொறியியல், கொள்முதல், கட்டுமான பணிகளை முன்னெடுக்க அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.
அதன்படி, பராப் நிறுவனம் விரிவான சாத்தியக்கூறு ஆய்வுகள், பொறியியல் திட்டமிடல் பொருட்கள், உபகரணங்கள், இயந்திரங்கள் மற்றும் பௌதீக கட்டுமானத்துக்கான கொள்முதல் செயற்பாடுகள், அமைப்பு, பரீட்சித்தல், திட்டத்தை ஆரம்பித்தல் போன்ற செயற்பாடுகனை முன்னெடுத்திருந்து. 514 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான இந்த ஒப்பந்தம் 2010 மார்ச் 15 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்தது.
ஈரானின் ஏற்றுமதி மேம்பாட்டு வங்கி (EDBI) 2013 வரை 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியிருந்தது. இருப்பினும், அந்த நேரத்தில் ஈரானுக்கு எதிராக விதிக்கப்பட்ட சர்வதேச தடைகள் காரணமாக அவர்களால் இத்திட்டத்திற்கு தொடர்ந்தும் நிதியளிக்க முடியாமல் போனது. எனவே, அரசாங்க நிதியைப் பயன்படுத்தி, ஒப்பந்தக்காரரான பராப் நிறுவனத்துடன், திட்டத்தைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல இலங்கை அரசாங்கம் தீர்மானித்திருந்தது.
இத்திட்டம் 2010 மார்ச் 15 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், 2015 மார்ச் 15 ஆம் திகதி நிறைவு செய்யப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஹெட்ரேஸ் (Headrace tunnel) சுரங்கப்பாதையில் எதிர்பாராத விதமாக தண்ணீர் நுழைதமையால் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்கள் மற்றும் சமூக பாதிப்புகள், நிதி சவால்கள் உலகளாவிய நெருக்கடிகள் மற்றும் கட்டுமான காலத்தில் ஏற்பட்ட கொவிட் – 19 தொற்று நோய் பரவல் காரணமாக, திட்டத்தின் நிறைவு திகதி 2024 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல் குறைபாடுகள் மற்றும் உத்தரவாதக் காலமும் 2025 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இத்திட்டமானது அதன் ஆரம்ப அமுலாக்கக் கட்டத்தை நிறைவு செய்திருந்ததுடன், திட்டதின் முதலாம் இரண்டாம் அலகுகள் தேசிய மின் கட்டமைப்புடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் சோதனைச் செயல்பாடுகள் 2024 ஏப்ரல் 1 ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தது.
பண்டாரவளை மற்றும் வெல்லவாயவிற்கு இடையில் தரை மட்ட உயரம் 700 மீற்றர் வித்தியாசத்தை கொண்டுள்ளது. இவ்வாறான உயரத்தில் சுரங்கப்பாதையின் திசையை மாற்றுவது எளிதல்ல. மேலும், விசையாழி (Turbine) ஊடாக நீர் ஊற்ற ஆழமான அழுத்த தண்டு நிர்மானிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற வடிவமைப்பை உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாததால், இதன் நிர்மானப்பணிகள் நிறைவடையும் போது, இது ஒரு அற்புதமான வடிவமைப்பாக இருக்கும்.
பராப் நிறுவனத்திடம் இருந்து இந்த திட்டத்தை பெற்ற பின்னர், நீர்ப்பாசன அமைச்சினால் இந்த திட்டத்தின் செயற்பாட்டாளராக உள்ள இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை மகாவலி அதிகாரசபையிடம் ஒப்படைக்கப்படும்.
மின்சாரத்தை உற்பத்தி செய்த பின்னர், அந்த நீர் சுரங்கப்பாதை மூலம் கிரிந்தி ஓயாவின் குறுக்கே நிர்மாணிக்கப்பட்டுள்ள அலிகோட்ட ஆர நீர்த்தேக்கத்திற்கு நீர் திருப்பி விடப்படுகிறது.
அதன் பின்னர், அந்த நீர் உமா ஓயா நீர்த்தேக்கத்தின் இடது கரையில் அமைந்துள்ள இத்திட்டத்தின் கீழ் நீர் கொள்ளளவு மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ள ஹந்தபானாகல நீர்த்தேக்கத்திற்கும் இத்திட்டத்தின் கீழ் மொனராகலை மாவட்டத்தின் வெல்லவாய, மஹாரகம, தனமல்வில, பலஹருத போன்ற பிரதேசங்களுக்கும் நீர் வழங்குவதற்காக, உமா ஓயாவின் தென் கரையில் நிர்மாணிக்கப்படுகின்ற புதிய குடா ஓயா நீர்த்தேக்கத்திற்கும் திருப்பி விடப்படவுள்ளது.
60 மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட நீர்ப்பாசன கட்டமைப்பும் நிர்மானிக்கப்பட்டு வருகிறது. இந்த நீர்ப்பாசன முறைகள் மூலம் சிறு மற்றும் பெரும் போகங்களில் தற்போதுள்ள 1500 ஹெக்டெயார் நிலப்பரப்பு மற்றும் புதிதாக அபிவிருத்தி செய்யப்பட்ட 4500 ஹெக்டெயார் நிலங்களுக்கு நீர்ப்பாசனத்துக்கான நீர் வழங்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நேரடிப் பங்களிப்பில் நடைமுறைப்படுத்தப்படும் உமாஓயா கீழ் நீர்த்தேக்க அபிவிருத்தித் திட்டமானது கிரிந்தி ஓயா பள்ளத்தாக்கில் நீண்டகாலமாக நிலவி வந்த நீர்ப் பற்றாக்குறையை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவருவதோடு, பெறப்படும் நீரின் மூலம் அதிகபட்ச பயன்களைப் பெற புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒருங்கிணைந்த விவசாய மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன், பண்டாரவளை மற்றும் வெல்லவாய பிரதேசங்களில் குடிநீர் மற்றும் கைத்தொழில் தேவைகளுக்கான நீரை வழங்குவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கும் உமாஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் தீர்வுகளை வழங்கியுள்ளது.
ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான முறையான இராஜதந்திர உறவுகள் 1962 இல் ஆரம்பிக்கப்பட்டதுடன், முறையான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பிருந்தே இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகள் பேணப்பட்டுள்ளன.
முந்தைய பாரசீக காலத்தில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் முக்கியமாக ஹோர்மூஸ் நீரிணை வழியாக நடத்தப்பட்டுள்ளன.
ஈரான் தனது தூதரகத்தை 1975 இல் கொழும்பில் ஆரம்பித்ததுடன், இலங்கை தனது தூதரகத்தை ஜனவரி 1990 இல் தெஹ்ரானில் நிறுவியது.
இரு நாடுகளும் அனைத்து துறைகளிலும் நெருக்கமான ஒத்துழைப்பைப் பேணுவதுடன், பலதரப்பு உறவுகளில் ஒன்றுக்கொன்று ஒத்துழைக்கின்றன.
ஈரானின் அபிவிருத்தி உதவிகள் கடன் வடிவில் வழங்கப்படுவதுடன், பிரதானமாக உட்கட்டமைப்பு வசதிகள், நீர்ப்பாசனம் மற்றும் வலுசக்தி போன்ற துறைகளை மேம்படுத்துவதில் முக்கிய கவனம் செலுத்துகிறது.
இலங்கை அரசாங்கம் ஏற்கனவே 19,301,572.6 அமெரிக்க டொலர்களை ஈரானுக்கு திருப்பிச் செலுத்தியுள்ளதுடன், செலுத்த வேண்டிய மீதமுள்ள தொகை ஏறத்தாழ 35,246,022.56 அமெரிக்க டொலர்களாகும்.
இலங்கையும் ஈரானும் ஐக்கிய நாடுகள் சபையிலும் அதன் துணை அமைப்புகளிலும் நெருக்கமாகப் பணியாற்றுவதுடன் இரு நாடுகளுக்கும் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளில் ஒன்றுக்கொன்று ஆதரவளித்து வருகின்றன.
இலங்கையும் ஈரானும் ஆசிய ஒத்துழைப்பு உரையாடல் (ACD) மற்றும் அணிசேரா அமைப்பு (NAM) மற்றும் இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கம் (IORA) உட்பட பல சர்வதேச மற்றும் பிராந்திய அமைப்புகளில் உறுப்பினர்களாக உள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையில் மஹன் விமான சேவையை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை இணங்கியுள்ளதுடன், மேலும் இது ஈரானிய சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வருவதற்கு ஊக்குவிப்பதோடு சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
2022 இல், இலங்கைக்கு அதிக சர்வதேச சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் நாடுகளின் பட்டியலில் ஈரான் 27 ஆவது இடத்தைப் பிடித்ததுடன், இது 2021 உடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காட்டுகிறது. 2023 ஜூன் இறுதிக்குள், 5,973 ஈரானிய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.